``தமிழக அரசு ஜனநாயகத்தை அழித்துவிட்டது'' - ஜெயராம் ரமேஷ்

அனைத்திந்திய தொழில் வல்லுநர் காங்கிரஸ் சார்பில் மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் (Madras Race Club) தமிழகத்தின் தற்போதைய சமூகச் சுற்றுச்சூழல் சிக்கல்கள் குறித்தும் அதை முன்னேற்றுவது குறித்தும் காங்கிரஸ் கட்சியின் வல்லுநர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் சூழலியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளரான நித்தியானந்த் ஜெயராமன், பொருளாதார வல்லுநர் சுபாஷ், காங்கயம் கால்நடை ஆராய்ச்சி அமைப்பின் மேலாளர் கார்த்திகேயன் சிவசேனாபதி போன்ற வல்லுநர்கள் கலந்துகொண்டனர். 

ஜெயராம் ரமேஷ்

கலந்துரையாடலில் பேசிய ஜெயராம் ரமேஷ், "ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாதிரியானது. கேரளாவை எடுத்துக்கொண்டால் அது சமூக முன்னேற்றத்தில் அதிகமாகவும் தொழில்ரீதியான முன்னேற்றம் குறைவாகவும் உள்ளது. குஜராத் தொழில் முன்னேற்றத்தில் அதிகமாகவும் சமூக முன்னேற்றம் மிகக் குறைவாகவும் உள்ளது. ஆனால், தமிழகம் இரண்டிலுமே தரமான முன்னேற்றத்தைக் கொண்டிருக்கிறது. கடந்த 50 வருடங்களில் தமிழகம் ஜப்பானைப் போன்ற அரசியல் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டிருந்தது. அதாவது, ஆட்சிக்கு யார் வந்தாலும் மக்கள் பொருளாதாரத்தில் தங்கள் பங்கைச் செவ்வனே செய்துகொண்டிருந்தனர். கடந்த ஓர் ஆண்டாக அந்த நிலை மாறிக்கொண்டிருக்கிறது. அதற்கு மிக மோசமான மாநில அரசாங்கமே காரணம். சிப்கோ இயக்கத்தில் தொடங்கி, இதுவரையிலும் எந்தவொரு போராட்டத்திலும் எந்தவொரு இந்திய அரசு செய்யாததைத் தற்போதைய தமிழக அரசு செய்துள்ளது. ஆனால், இப்போதிருக்கும் தமிழக அரசு 13 பேரைக் கொன்று ஜனநாயகத்தை அழித்துவிட்டது. 1970-க்குப் பிறகு திராவிடக் கட்சிகள் பல முன்னேற்றங்களைக் கொண்டுவந்துள்ளனர். ஆனால், அவையனைத்துக்கும் அடித்தளமாக அமைந்திருப்பவை அவர்களுக்குமுன் ஆட்சிசெய்த காமராஜரே. அவரைப் பின் தொடர்ந்து முன்னேறிவந்த தமிழகம் தற்போது சுற்றுச்சூழல் சீர்கேடுகளில் முன்னிலையிலும் அதைக் கையாள்வதில் பின்தங்கிய நிலையில் தமிழக அரசும் இருக்கிறது."

அதைத் தொடர்ந்து 2011-க்குப் பிறகு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலே நடைபெறவில்லை என்பதைக் கலந்துரையாடலின்போது தெரிந்துகொண்ட ஜெயராம் ரமேஷ் இதுகுறித்து காங்கிரஸ் சார்பில், உடனடியாகக் கட்சியில் பேசித் தேர்தலை நடத்த முயற்சிகள் எடுப்பதாக உறுதியளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!