`மின் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம்!’ - காட்டுமன்னார் கோவில் அருகே மின்வாரிய ஊழியர் கைது

கடலூர் மாவட்டம் லால்பேட்டை தமிழ்நாடு மின்சார வாரிய உதவி மின்சாரத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் வணிக உதவியாளர் தமிழினியனை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தமிழினியன்

வீராணம் ஏரிக்கரையில் உள்ள கொள்ளுமேட்டை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர், தனது பெட்டிக் கடைக்கு மின் இணைப்பு வேண்டி, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் லால்பேட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் மனு அளித்தார். சுமார் ஒரு ஆண்டாக மின் இணைப்பு வேண்டி அலைந்து வந்துள்ளார். மின் இணைப்புக் கொடுக்க அதிகாரிகள் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாகத் தெரிய வந்தது. இதுகுறித்து அவர், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குப் புகார் அளித்தார். 

அதனை தொடர்ந்து இன்று லால்பேட்டை மின்சாரத்துறை அலுவலகத்தில் கடலூர் லஞ்ச ஒழிப்புப் போலீஸார், காலை முதலே மாற்று உடையில் வாடிக்கையாளர் போல உள்ளே நுழைந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மதியம் 12 மணியளவில் ரசாயன பவுடர் தடவிய 5,000 ரூபாயை இளஞ்செழியனிடம் கொடுத்து உள்ளே அனுப்பினர். அந்தப் பணத்தை அவர் வணிக உதவியாளர் தமிழினியனிடம் கொடுத்தார். அப்பொழுது லஞ்ச ஒழிப்புத் துறை கடலூர் டி.எஸ்.பி மெர்லின் ராஜாசிங், இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீஸார் தமிழினியனைக் கையும் களவுமாகப் பிடித்து, கைது செய்தனர். இச் சம்பவம் மின்சார வாரிய ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!