வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (13/07/2018)

கடைசி தொடர்பு:21:10 (13/07/2018)

ரயிலில் அவசியமின்றி அபாய சங்கிலியை இழுத்த 744 பேரிடம் 2.8 லட்சம் அபராதம் வசூல்!

தென்னக ரயில்வே கோட்டத்தில் கடந்த 6 மாத காலத்தில் அவசியம் இல்லாமல் ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்ததற்காக 744 பேரிடம் இருந்து 2.8 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. 

அபாயச் சங்கிலி - அபராதம்

மிக முக்கியமான காரணம் எதுவும் இல்லாமல் ரயில் பயணங்களின்போது, அபாய சங்கிலியை இழுப்பது தண்டனைக்குரிய குற்றம். இதற்காக, 1989-ம் வருடத்தைய ரயில்வே சட்டத்தின் 141-வது பிரிவின்படி ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படலாம். அதனால் அவசியம் இல்லாமல் சங்கிலியை இழுப்பதை தவிர்ப்பதே பயணிகளுக்கு நல்லது என்கிறார்கள், ரயில்வே அதிகாரிகள்.  

இது குறித்துப் பேசிய ரயில்வே துறையின் அதிகாரிகள்,’’அத்தியாவசியமான சமயங்களில் ரயிலை நிறுத்துவதற்காகவே அபாய சங்கிலி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் பயணிகள் அற்பக் காரணங்களுக்காக ரயிலை நிறுத்தி விடுகிறார்கள். குறிப்பாக, தங்களுடன் வந்தவர் ரயிலில் ஏறும் முன்பாக ரயில் கிளம்பி விட்டால், சகபயணி யாராவது ஸ்டேஷனில் இறங்கிச் சென்று, எதையாவது வாங்கிவிட்டு வருவதற்குள் ரயில் கிளம்பிவிட்டால். அல்லது செல்போன் கீழே விழுந்து விட்டல், இறங்க வேண்டிய ஸ்டேஷனில் இறங்காமல் தூங்கி விட்டால் செயினைப் பிடித்து இழுத்து விடுகிறார்கள். 

செயினை இழுப்பதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டியது அவசியம். செயின் இழுக்கப்பட்டால் மீண்டும் என்ஜினை இயங்க வைத்து, சரி செய்வதற்கே நீண்ட நேரமாகிவிடும். அதனால் அந்த ரயில் தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன், இந்த ரயிலின் தாமதம் காரணமாக அந்த வழியாக இயங்கும் பிற ரயில்களும் தாமதமாக செல்ல வேண்டியதாகிவிடும். 

அதனால், பயணிகளுக்கு ஏதாவது சிரமம் என்றால் ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகர், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் உள்ளிட்டவர்களின் உதவியை நாடலாம். அல்லது ரயில்வே பாதுகாப்பு படையின் உதவி எண் 182, அரசு ரயில்வே போலீஸ் ஹெல்ப்லைன் எண் 1512, ரயில் பயணிகளுக்கான உதவி மைய எண் 138 ஆகியவற்றை தொடர்பு கொண்டால், அவர்கள் உரிய ஆலோசனைகளையும் உதவியையும் செய்வார்கள்.

ரயிலை தாமதப்படுத்தும் வகையில், தேவையில்லாமல் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்ததாக கடந்த 6 மாத காலத்தில் மட்டும் 744 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து மொத்தம் 2.8 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு இருக்கிறது’’ என்கிறார்கள், தென்னக ரயில்வே அதிகாரிகள்.