`அடிப்படை வசதிகள் கேட்டு போராடிய 5 மாணவர்கள் சஸ்பெண்ட்!’ - சர்ச்சையில் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி

கும்பகோணம் அரசினர் தன்னாட்சி கலைக் கல்லுாரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டம் நடத்தினார்கள் மாணவர்கள். இதில், போராட்டம் நடத்தியவர்களில் ஒரு மாணவி உட்பட  ஐந்து மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட்  செய்து உத்தரவிட்டது. இதனைக் கண்டித்து  மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் தங்கள் உரிமைகளுக்காகவும்,வாழ்வாதாரம் பாதிக்கின்ற வகையில் அரசால் செயல்படுத்தபடும் திட்டங்களை எதிர்த்தும் சமூக செயர்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராடி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை ஒடுக்கும் விதமாக அவர்களை அரசு கைது செய்து அச்சுறுத்தி வருகின்றது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அரசுக் கல்லூரி ஒன்றில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக் கோரி போராட்டம் நடத்திய  மாணவர்கள் 5 பேரை  நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.இ து மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் தன்னாட்சி கலைக் கல்லுாரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லுாரியில் போதிய கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை அவற்றை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என கூறி மாணவர்கள்  இரண்டு நாள்களாக வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவர்களைப் போராட்டம் நடத்தத் துாண்டியதாகவும், கல்லூரியில் ஒழுங்கீனமற்ற முறையில் செயல்பட்டதாகவும், வகுப்புகளுக்குச் செல்லும் சக மாணவர்களை செல்லவிடாமல் தடுத்ததாகக் கூறியும் கல்லுாரியின் ஆட்சிமன்ற நிர்வாகக் குழு முடிவின்படி, கல்லுாரியில் படிக்கும் மூன்றாமாண்டு மாணவர்கள் பிரவீன்ராஜ், தீபக், பாலமுருகன், பிரகாஷ்ராஜ் இரண்டாமாண்டு மாணவி ஜெனி ஆகிய 5 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது கல்லூரி நிர்வாகம்.

இதனைக் கண்டித்து இன்று காலை கல்லாரிக்கு வந்த மாணவர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களை மீண்டும் கல்லுாரிக்குள் அனுமதிக்க வேண்டும், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்கள் மத்தியில் கல்லுாரி முதல்வர் பூங்கோதை பேசுகையில், ``சில அமைப்பின் துாண்டுதலின்பேரில் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். புதிய மாணவர்கள் மத்தியில் போராட்ட குணத்தை ஏற்படுத்தக் கூடாது. பெற்றோருக்கும் அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டாம். இந்த கல்லுாரிக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 லட்சம் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெறுகிறது’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!