வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (13/07/2018)

கடைசி தொடர்பு:22:22 (13/07/2018)

`நெல் கொள்முதலில் தமிழக அரசு அலட்சியம்!' - வேதனையில் தவிக்கும் விவசாயிகள்

காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடை நெல் சாகுபடி செய்த விவசாயிகள், தங்களது நெல்லை அரசு கொள்முதல் நிலையங்கள் விற்பனை செய்ய முடியாமல் பரிதவித்து வருகிறார்கள். இதனால் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு, தங்களது நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, வடுவூர், மடிகை உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் போர்வெல் வைத்துள்ள விவசாயிகள், பல ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்துள்ளார்கள். இவை தற்போது அறுவடைக்கு வந்துள்ளன. ஆனால், இவர்கள் கொண்டு செல்லும் நெல்லை, அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் வாங்க மறுக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி வீரசேனன், ``சாக்குகள் இல்லாததால, நெல்லை வாங்க முடியாதுனு அங்கவுள்ள ஊழியர்கள் மறுக்குறாங்க. இதனால், விவசாயிகள் கொண்டு போகுற நெல், திறந்த வெளியில் கிடந்து மழையில் நனைஞ்சு, தரம் இழக்குது. இதனால், விவசாயிகளுக்கு ஏகப்பட்ட நஷ்டம். வேறு வழி இல்லாததால், தனியார் விவசாயிகள்கிட்ட குறைவான விலைக்கு எங்க நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுருக்கோம். இதனால் ஒரு மூட்டைக்கு 100 - 200 ரூபாய் வரைக்கும் நஷ்டம். ஒரு ஏக்கருக்கு 3,000-லிருந்து 6,000 ரூபாய் வரைக்கும் வருவாய் இழப்பு. வேளாண்மைத் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் எங்களுக்கு இந்த இக்கட்டான நிலைமை.

மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தின் முகவராக இருந்துதான், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், இங்கவுள்ள விவசாயிகள்கிட்ட இருந்து நெல்லை கொள்முதல் செஞ்சு, அவங்களுக்கு கொடுக்குறாங்க. இந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதியுடன் கொள்முதலை நிறுத்திட்டதாக இந்திய உணவுக் கழக அதிகாரிகள் சொல்றாங்க. இது எப்படி விவசாயிகளுக்குத் தெரியும்? கோடை நெல் சாகுபடிக்கான பணிகள் தொடங்கும் முன்பே, எந்தத் தேதி வரைக்கும் நெல்கொள்முதல் செய்வோம்னு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளுக்கு தெரியப்படுத்தியிருக்கணும். அதற்கேற்ப சாகுபடி பரப்பை தீர்மானிச்சு, ஒரு குறிப்பிட்ட அளவு நெல் சாகுபடி செய்ய விவசாயிகளை அறிவுறுத்தியிருக்கணும். ஆனால், வேளாண்மை அதிகாரிகள் இதைப் பத்தியெல்லாம் கொஞ்சமும் கண்டுக்குறதில்லை. அவங்களோட அலட்சியத்துக்கு நாங்க பலிகடா ஆக வேண்டியதாகயிருக்கு” என வேதனையுடன் தெரிவித்தார். தமிழக அரசு இப்பிரச்னையில் விரைந்து செயல்பட்டு, விவசாயிகளுக்கு கை கொடுக்க வேண்டும். நெல் கொள்முதல் துரிதமாக நடைபெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.