முட்டைக்கு வந்த சிக்கல்: தவிக்கப்போகும் மாணவர்கள்! திட்டம் போடும் கிறிஸ்டி!

வரும் 31-ம் தேதியோடு  முட்டைக்கான டெண்டர் முடிவுக்கு வருகிறது. இதனால் கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி அன்று இந்த கல்வி ஆண்டில் முட்டை சப்ளை செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை சமூக நலத்துறை வெளியிட்டது.

முட்டைக்கு வந்த சிக்கல்: தவிக்கப்போகும் மாணவர்கள்! திட்டம் போடும் கிறிஸ்டி!

ரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கும் ஏழை மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்ட மதிய உணவில் முட்டை வழங்கும் திட்டத்தில் ஊழல் கறை படிந்துள்ளதால், அடுத்த மாதம் முதல் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு முட்டை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாள்தோறும் மதிய உணவில் முட்டை வழங்கபட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் 55 லட்சம் முட்டைகள் விநியோகம் செய்யபட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்யும் பணிகளை, கடந்த சில ஆண்டுகளாகவே நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனம் செய்துவந்தது. இந்த நிறுவனம் முட்டை கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது. மேலும், முட்டை உற்பத்திப் பண்ணையே இல்லாமல் முட்டை சப்ளை செய்யும் நிறுவனமாக அது இருந்துவருவதாக நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் புலம்பி வந்தனர். 

சத்துணவு முட்டை சாப்பிடும் மாணவர்கள்

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற முட்டை சப்ளைக்கான டெண்டரை கிறிஸ்டி நிறுவனத்திற்கு நெருக்கமான ஸ்வர்ணபூமி மற்றும் நேச்சுரல் புட்ஸ் நிறுவனம் எடுத்தது. சந்தையில் முட்டையின் மதிப்பைவிட கூடுதல் விலைக்கு முட்டை சப்ளைக்கான ஒப்பந்தத்தை அரசு கொடு்த்ததாக அப்போதே சர்ச்சை எழுந்தது. ஓர் ஆண்டு முட்டை சப்ளை செய்தவற்கு 600 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் தொகையை இந்த இரண்டு நிறுவனங்களும் பெற்றன. ஒரு முட்டைக்கு ஐம்பது பைசா வீதம் ஆளும் தரப்பிற்கு கிறிஸ்டி நிறுவனத்தினால் லஞ்சமாக வழங்கப்பட்டு வந்தது. ஒரு முட்டைக்கு ஐம்பது பைசா என வாரத்திற்கு நான்கு கோடி முட்டைகளுக்கான தொகை சம்பந்தப்பட்டவர்களின் பாக்கெட்டிற்கு சத்தமில்லாமல் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், கிறிஸ்டி நிறுவனம் அரசுத்துறையில் மேலும் சில டெண்டர்களில் கால்பதிக்க ஆரம்பித்ததால், வருமான வரித்துறையின் கண்களை அது உறுத்தியது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்டி நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி பத்து கிலோ தங்கம், ரொக்கமாக பல கோடி ரூபாய் மற்றும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட அன்பளிப்புகள் குறித்த ஆவணங்களை அள்ளிச்சென்றனர். 

இந்த நிலையில், வரும் 31-ம் தேதியோடு  முட்டைக்கான டெண்டர் முடிவுக்கு வருகிறது. இதனால் கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி அன்று இந்த கல்வி ஆண்டில் முட்டை சப்ளை செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை சமூக நலத்துறை வெளியிட்டது. அந்த டெண்டர் ஆவணத்தில் 'நாள் ஒன்றுக்கு ஐம்பது லட்சம் அக்மார்க் முத்திரை கொண்ட முட்டைகள் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த டெண்டரில் பங்கேற்பதற்கான சில விதிமுறைகளையும் சமூக நலத்துறையினர் அறிவித்திருந்தனர். அந்த விதிமுறைகள் கிறிஸ்டி நிறுவனத்திற்கும், அதன் துணை நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கியதாக முட்டை உற்பத்தியாளர்கள் மத்தியில் புலம்பல் எழுந்தது.

இந்த நிலையில், டெண்டர் முடிவு செய்யும் நாளான  ஜூலை 11-ம் தேதிக்கு முன்பாக, கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதால் அந்த நிறுவனம் இந்த ஆண்டு முட்டை டெண்டர் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், முட்டை டெண்டரில் பங்கேற்பதற்கான விண்ணபங்கள் அளித்த நிறுவனங்களில் கிறிஸ்டி நிறுவனத்திற்கு நெருக்கமான மூன்று நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. அவை தவிர, ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள், நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு சொசைட்டி உள்ளிட்டவையும் டெண்டருக்கு விண்ணப்பித்திருந்தன. கிறிஸ்டி நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று போர்க்கொடி துாக்கியதால் அதிகாரிகள் ஒவ்வொரு நிறுவனத்திடமும் ஒவ்வொரு காரணம் சொல்லி டெண்டரை நிறுத்தி விட்டனர். 

டெண்டர் அறிவிப்பு - கிறிஸ்டி

ஆனால், வரும் முப்பத்தி ஒன்றாம் தேதியோடு முட்டைக்கான டெண்டர் காலம் முடிகிறது. ஆகஸ்ட்1-ம் தேதி முதல் புதிதாக டெண்டர் எடுப்பவர்கள், முட்டை விநியோகத்தைச் செய்ய வேண்டும். இப்போது டெண்டர் நிறுத்தப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் மாதம் முதல் முட்டை விநியோகம் பள்ளிகளுக்குச் செல்வது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் முட்டை விநியோகம் குறித்து தமிழ்நாடு முட்டை உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் துணைத்தலைவர் பாலசுப்பிரமணியனிடம் கேட்டபோது, “கிறிஸ்டி நிறுவனம் ஒன்றுக்கே தமிழகம் முழுவதும் சப்ளை செய்யும் டெண்டர் கொடுத்ததற்கு ஆரம்பத்திலேயே நாங்கள் வழக்குத் தொடுத்து கடுமையாக எதிர்த்துப் போராடினோம். நாங்கள் அப்போது என்ன காரணம் சொன்னமோ அது இப்போது நடந்துவிட்டது. ஜூலை 31-ம் தேதியோடு டெண்டர் காலம் முடிவடைந்தாலும் மேலும் மூன்று மாதங்களுக்கு அந்த நிறுவனமே முட்டைகளை சப்ளை செய்யலாம். காரணம் டெண்டர் விதிமுறைகளில் அதுவும் கருத்துருவாக சேர்க்கப்பட்டிருக்கும். எனவே, இன்னும் மூன்று மாதத்திற்கு எந்தச் சிக்கலும் வராது. அதற்கு அரசு மாற்றுவழியைக் கண்டறிய வேண்டும். இனியும் ஒரே நிறுவனத்திற்கு ஒட்டுமொத்த கொள்முதலையும் வழங்குவதை நிறுத்த வேண்டும்” என்றார். இந்த நிலையில் கிறிஸ்டி நிறுவனம் சிக்கலில் சிக்கியுள்ளதால், அந்த நிறுவனம் நாமக்கல்லைச் சேர்ந்த வேறு ஒரு நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். புதியதாக அறிவிக்க உள்ள டெண்டரில் அந்த நிறுவனத்தின் பெயரில் டெண்டர் எடுத்து, மீண்டும் முட்டையில் முத்துக்குளிக்கத் திட்டமிட்டுள்ளது கிறிஸ்டி நிறுவனம் என்கிறார்கள் நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!