`கடைக்குட்டி சிங்கம்’ படம் பார்க்க வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய ரசிகர்கள்!

தூத்துக்குடியில் நடிகர் கார்த்தி நடித்த `கடைக்குட்டி சிங்கம்’ படம் ரிலீஸை முன்னிட்டு அவரின் ரசிகர்கள் தியேட்டருக்குப் படம் பார்க்க வந்த 500 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினர். 

மரக்கன்றுகள் வழங்கிய ரசிகர்கள்

நடிகர் சூர்யாவின், 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அவரின் தம்பி நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் `கடைக்குட்டி சிங்கம்.' தமிழகம் முழுவதும் இப்படம் இன்று வெளியாகியுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில், சத்யராஜ், பானுப்ரியா, மௌனிகா, விஜி, யுவராணி, சூரி, சரவணன், சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் எனப் பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி, விவசாயத்தை மீட்டெடுக்கும் ஓர் இளைஞரின் கதாபாத்திரத்தில் விவசாயியாகவே  நடித்துள்ளார். விவசாயத்தைக் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸை முன்னிட்டு, துாத்துக்குடியில் கார்த்தியின் ரசிகர்கள், படம் பார்க்க வந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். துாத்துக்குடியில் இப்படம் வெளியான கிளியோபட்டரா திரையரங்கில் படம் பார்க்க வந்த 500 பேருக்கு பழ மரக்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இது குறித்து கார்த்தி ரசிகர் மன்ற துாத்துக்குடி பொறுப்பாளர் வெங்கடேஷ் கூறுகையில், ``இந்தப் படம் விவசாயத்தை அடிப்படையாக வைத்து உருவாகி வெளியாகியுள்ளது. படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாகத் தோன்றும். அதற்கான முன்னோட்டமாகவும் விழிப்பு உணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் படம் பார்க்க வரும் 500 பேருக்கு தென்னை, மா, பலா, கொய்யா ஆகிய பலன் தரும் மரக்கன்றுகளை வழங்கினோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!