உறக்கத்திலேயே உயிரிழந்த 3 வயது குழந்தை - பரமக்குடி அருகே சோகம்!

பரமக்குடி அருகே, 3 வயது பெண் குழந்தை உறங்கிய நிலையிலேயே உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம்  பரமக்குடி அருகே உள்ள தோளூர் தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களுக்கு 3 வயதில் சுபஶ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. தங்கள் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு குழந்தை சுபஶ்ரீ சென்று வந்துள்ளது.  இந்நிலையில், நேற்று  மதியம் அங்கன்வாடி மையத்தில் இருந்து தனது மகள் சுபஸ்ரீயை முனீஸ்வரி வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார். அப்போது, தாயின் கைகளைப் பிடித்தவாறு வேடிக்கைபார்த்துக்கொண்டு  நடந்து சென்ற குழந்தை, கால் தடுமாறி கீழே விழுந்துள்ளது. கீழே விழுந்ததால் அழுத குழந்தையை சமாதானப்படுத்தியபடி வீட்டுக்கு அழைத்துசென்றுள்ளார் முனீஸ்வரி. வீட்டுக்குச் சென்றதும் குழந்தை  தூங்கிவிட்டது. வெகு நேரத்திற்குப் பின்னரும் குழந்தை சுபஸ்ரீ எழாமல் இருக்கவே, பதற்றமடைந்த முனீஸ்வரி, குழந்தையைத் தட்டி எழுப்பியபோது குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.

கால் இடறிக் கீழே விழுந்ததில் அடி எதுவும் பட்டதா என்பதைக்கூட சொல்லத் தெரியாத நிலையில் உறங்கிய குழந்தை சுபஶ்ரீ உயிரிழந்தது கண்டு முனீஸ்வரி அழுதுபுரண்டார். முனீஸ்வரியின் அழுகையைக் கேட்டு வந்த உறவினர்கள், குழந்தைக்கு நேர்ந்த கதியைக் கேட்டு கலங்கிப்போயினர். இச்சம்பவம் தொடர்பாக  முனீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், பரமக்குடி தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் இது போன்ற சம்பவங்களின்போது, பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இத்தகைய தாங்க முடியாத இழப்பைத் தடுத்திருக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!