வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (14/07/2018)

கடைசி தொடர்பு:12:23 (14/07/2018)

8 வழிச்சாலை கருத்து கேட்பு கூட்டம்..! புறக்கணித்த விவசாயிகள் கண்ணீர் மல்க மனு

கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலை அமைப்பதற்காக நான்காம் கட்டமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்துக்கு கவலையும், கண்ணீருமாக வந்திருந்த விவசாயிகள் 8 வழிச்சாலைக்கு நிலம் கொடுக்க முடியாது என்று எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.

8 வழி பசுமைச் சாலை வரவுள்ள உத்தமசோழபுரம், பூலாவரி, பாப்பாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, கெஜல்நாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சேலம் நெத்திமேட்டில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் டி.ஆர்.ஒ., சுகுமார் தலைமையில் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் போலீஸார் குவிக்கப்பட்டு ஒவ்வொருவரையும் பரிசோதனை செய்து உள்ளே விட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் கொண்டு வந்த தண்ணீரைக்கூட பரிசோதித்தப் பிறகு அனுமதிக்கப்பட்டார்கள். பல பாதிக்கப்பட்ட பெண்கள் ``நிலம்தான் எங்களுக்கு வாழ்க்கை. 8 வழிச் சாலைக்கு நிலம் கொடுக்க முடியாது" என்று கண்ணீர் விட்டு அழுதுகொண்டே சென்றார்கள்.

இதுபற்றி கருத்து கேட்பு கூட்டத்துக்கு வந்திருந்த மோகனசுந்தரம் பேசுகையில், ``நான் பூலாவரியில் இருந்து வந்திருக்கிறேன். எனக்கு 7 ஏக்கர் இருக்கு. நடு மையத்தில் வருகிறது. என் வீடு, நிலம் 3 1/2 ஏக்கர் அடிபடுகிறது. மீதி உள்ள 3 ஏக்கரும் ரோட்டுக்கு இரண்டு புறத்திலும் போகிறது. இதனால் இன்னொரு பக்கம் இருக்கும் விளை நிலத்துக்குப் போவதற்கு 10 கி.மீட்டர் சுற்றிப் போக வேண்டும்.

இந்த நிலத்தை எங்க அப்பா, அம்மா வாங்கினார்கள். அவர்கள் வாழ்நாள் முழுக்க காட்டை பண்படுத்தவே சரியாகப் போய்விட்டது. நான் பலனை அனுபவிக்க வரும்போது இப்படி ஒரு ஆபத்து வந்துவிட்டது. எங்க அப்பா, அம்மாவுக்கு ரொம்ப வயதாகி விட்டது. தினமும் சாப்பாடு கூட சாப்பிடாமல் அழுதுகொண்டே இருக்கிறார்கள். நாங்களும் எவ்வளவோ கதறி அழுதுப் பார்த்து விட்டோம். அரசாங்கம் காது கொடுத்துக் கேட்பதுபோல தெரியவில்லை. கருத்து கேட்புக் கூட்டத்தில் நம்முடைய கருத்துகளை சொல்லலாம் என்று நம்பிக்கையோடு வந்தோம். நிலம் கொடுக்க விருப்பம் அல்லது விருப்பம் இல்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போகச் சொன்னார்கள். அதற்காக ஒரு மனு கொடுத்தார்கள். நாங்கள் ஏற்கெனவே கூட்டத்தைப் புறக்கணிப்பதாக மனு எழுதி வந்திருந்தோம். அதில் கையெழுத்துப் போட்டு கொடுத்துவிட்டு வந்து விட்டோம்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க