வெளியிடப்பட்ட நேரம்: 03:13 (14/07/2018)

கடைசி தொடர்பு:12:01 (14/07/2018)

காவிரி ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் முடக்கமா? மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பும் பெ.மணியரசன்

காவிரி மேலாண்மை ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் தனது கடமையை நிறைவேற்றவில்லை என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவருமான பெ.மணியரசன் குற்றம் சாட்டியுள்ளார். இவைகளை மத்திய அரசு திட்டமிட்டே உள்நோக்கத்துடன் முடக்கி வைத்துள்ளதா? எனவும் இவர் கேள்வி எழுப்புகிறார். 

பெ மணியரசன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய பெ.மணியரசன், ``காவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 2-ம் தேதி கூடியது. ஒழுங்காற்றுக் குழு 5-ம் தேதி கூடியது. அதன் பிறகு இவை செயலற்ற அமைப்புகளாகவே முடங்கிக் கிடக்கிறது. சட்டப்படி அமைக்கப்பட்ட இந்த இரண்டு அமைப்புகளுக்கும் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளாவில் உள்ள 8 அணைகளையும் திறந்து, மூடும் அதிகாரம் உள்ளது. ஆனால், இந்தப் பணியை இவைகள் செய்யவில்லை. இந்த அணைகளை எட்டிக்கூட பார்க்கவில்லை. பெங்களூரில் தலைமையகம் அமைத்து, அங்கேயே தங்கி பணியாற்ற வேண்டிய ஒழுங்காற்றுக் குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் பெங்களூரில் ஏன் தங்கவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் ஒழுங்காற்றுக் குழுவுக்கும் முழுநேரமும் பணியாற்றக்கூடிய அதிகாரிகளைதான் மத்திய அரசு நியமித்திருக்க வேண்டும். 

ஆனால், வேறு பணியில் முழுநேரமாக பணியாற்றுபவர்களை காவிரி ஆணையத்துக்கும் ஒழுங்காற்றுக் குழுவுக்கும் கூடுதல் பொறுப்பாகவே மத்திய அரசு நியமித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதற்காகவே இவ்விரு அமைப்புகளையும் மத்திய அரசு நயவஞ்சகமாக முடக்கி வைத்துள்ளதோ என சந்தேகம் எழுகிறது. இதை தட்டிக்கேட்டு, தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலைநாட்ட வேண்டிய தமிழக ஆட்சியாளர்களோ, காவிரி உரிமையை மீட்டுவிட்டதாக, போலித்தனமான வெற்றி விழாக்களை கொண்டாடி தமிழர்களை ஏமாற்றுகிறார்கள். கர்நாடகாவில் வழக்கத்தைவிட அதிகமாக பருவ மழை பொழிந்து, அங்குள்ள அணைகள் உடையும் அபாயம் ஏற்பட்டதால்தான் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்தார்கள். வெள்ள அபாய காலத்தில் செயல்படாத காவிரி ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும், பருவ மழை குறைவாக உள்ள காலத்தில் ஆக்கபூர்வமாக இருக்கிறதா எனக் கேள்வி எழுகிறது. இந்த இரண்டு அமைப்புகளும் தனது அதிகாரத்தை கர்நாடகத்திடம் தாரை வார்த்துவிட்டனவா?”என காட்டமாக கேள்வி எழுப்புகிறார்.