வெளியிடப்பட்ட நேரம்: 05:25 (14/07/2018)

கடைசி தொடர்பு:11:30 (14/07/2018)

எரித்துக் கொலை செய்யப்பட்ட பட்டதாரி பெண்! காணாமல் போன காதலருக்கு வலை வீச்சு

 ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை விலக்கு சாலை பகுதியில் பட்டதாரிப் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய காதலனை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை விலக்கு சாலைப் பகுதியில் பட்டதாரிப் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.   தப்பி ஓடிய காதலனை போலீஸார் தேடி வருகின்றனர்.

கொலை

ராமநாதபுரம் அருகே ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகள் மாலதி(21). இவர் சென்னையில் தனியார் கல்லூரியில்  பி.ஏ.தமிழில் பட்டம் பெற்றவர். இவரை கடந்த மாதம் 29-ம் தேதி முதல் காணவில்லையென அவரது தாயார் கலைச்செல்வி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். மேலும், மாலதியை ராமநாதபுரம் அருகே கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (24) என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கலாம் எனவும் அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அவரின் புகாரின் பேரில் போலீஸார் கடந்த 11-ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கைக்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட் அருகில் உள்ள அரசுக்குச் சொந்தமான மிளகாய் குளிர்பதனக் கிடங்கு அருகே பெண் ஒருவரது உடல் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் எலும்புக்கூடாக கிடந்துள்ளது. அதன் அருகில் பெண்ணின் துப்பட்டா, வளையல் ஆகியனவும் கிடந்தன.

இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ராமநாதபுரம் டி.எஸ்.பி. எஸ்.நடராஜன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். இந்த விசாரணையில் சம்பவ இடத்தில் கிடந்த துணிகளை மாலதியின் உறவினர்களிடம் அடையாளம் காட்டியபோது எரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது மாலதி என்பது உறுதியானது. இச்சம்பவம் தொடர்பாக மாலதியைக் காதலித்ததாக கூறப்படும் இளைஞர் சிவக்குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகவும், அவரை கடந்த ஒரு வாரமாக காணவில்லையெனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக சத்திரக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.