வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/07/2018)

கடைசி தொடர்பு:11:26 (14/07/2018)

முத்துராமலிங்கத் தேவர் வரலாற்றைப் பாடத்தில் சேர்க்க வேண்டும்..! கொதிக்கும் ஃபார்வேட் பிளாக் கட்சி

பாடப் புத்தகங்கள்

6-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் பற்றிய பாடத்தை மீண்டும் இணைக்க வேண்டும் என அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியினர் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அகில இந்திய ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.சுந்தரம் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், ‘தெய்வத்திருமகன் தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை 6-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கியுள்ளனர். மீண்டும் அதை பாடப் புத்தகத்தில் இணைக்க வேண்டுமென' குறிப்பிட்டிருந்தனர்.

இதுகுறித்து அகில இந்திய ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.சுந்தரம் கூறுகையில், ``பல ஆண்டுகளாக பள்ளிப் பாடங்களில் இடம்பெற்றிருந்த முத்துராமலிங்கத் தேவர் பற்றிய பாடத்தை நீக்கியது மிகவும் தவறு. நேற்று வந்த இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களைப் பற்றிய பாடங்களைப் புத்தகங்களில் சேர்ப்பவர்கள், தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ள முத்துராமலிங்கத் தேவர் பற்றிய பாடத்தை நீக்கியிருப்பது தவறான செயலாகும். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் செய்த செயலுக்கும், முத்துராமலிங்கத் தேவரின் தியாகத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. மீண்டும் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய பாடத்தை புத்தகத்தில் இணைக்க வேண்டுமென அமைச்சர்களிடம் வலியுறுத்தியும் தற்போது வரை இணைக்கவில்லை. இதுவே காந்திஜி, நேதாஜி போன்றவர்களைப் பற்றிய பாடங்களைப் புத்தகங்களில் இருந்து நீக்குவார்களா? இதுகுறித்து பலமுறை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் வலியுறுத்தியும், அவர் ஏன் இந்த விஷயத்தைப் பெருசா எடுத்துக்க மாட்டேங்குறாருன்னு தெரியலை. இதேநிலை நீடித்தால் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட்டு, பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கத் தயங்கமாட்டோம்” என்றார்.