பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைக்கக் கூடாது..! தமிழக அரசு அறிவிப்பு | TN government raise voice against Indian higher education commission

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (14/07/2018)

கடைசி தொடர்பு:10:48 (14/07/2018)

பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைக்கக் கூடாது..! தமிழக அரசு அறிவிப்பு

இந்திய உயர் கல்வி ஆணையம் வேண்டாம். பல்கலைக்கழக மானியக் குழுவே தொடர வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். 

கல்வி

பல்கலைக்கழகங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை பல்கலைக்கழக மானியக் குழு கவனித்துவருகிறது. தற்போது, பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான வரைவு சட்ட மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் வெளியிட்டு, கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்தை மத்திய அரசு கேட்டுள்ளது.

கே.பி.அன்பழகன்

இதற்கான காலஅவகாசத்தை ஜூலை 20-ம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கல்வியாளர்கள் பலரும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். கலை, அறிவியல் கல்விக்கான உயர்கல்வி நிறுவனங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இதுபோன்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வரைவு சட்டமசோதாவைப் பற்றியும், அதில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றியும் தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் இதுகுறித்து தெரிவித்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், '1956-ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக மானியக் குழு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. எனவே, இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற அமைப்பு தேவையற்ற ஒன்று. கல்வி சார்ந்த பணிகளை மட்டும் இந்த அமைப்பு கவனிக்கும் என்பதும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அதிகாரம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் இருக்கும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. யூ.ஜி.சிதான் செயல்படவேண்டும் என்பது தமிழக அரசின் கருத்து. இந்தக் கருத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பிவைப்போம்' என்று தெரிவித்தார்.