கரூரில் களைகட்டும் நாட்டுக்கோழி விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி!

கரூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் மண்பாண்ட சமையல் ஆகியவை முக்கியத்துவம் பெற்று வருகிறது. பொதுமக்கள் அதை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

 நாட்டுக்கோழி

'பாஸ்ட்புட் உணவு' முறையால் மனிதர்கள் இன்று ஏகப்பட்ட நோய்களுக்கு ஆளாகி அவஸ்தைப்படுகிறார்கள். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் மூலை முடுங்கெங்கிலும் மண்பாண்ட சமையல் ஹோட்டல்கள் பெருகத் தொடங்கியுள்ளன. அதனால், நாட்டுக்கோழி வளர்ப்பு தொழிலில் பல விவசாயிகள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, நமது பாரம்பர்யத்தைக் காக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
 நம் முன்னோர்கள் வகுத்த நன்னெறி செயல்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், உணவையே மருந்தாக்கி உட்கொண்ட நடைமுறைகள் கடந்த இருபது ஆண்டுகளாக திசைமாறி, துரித உணவு என்று மனிதர்களுக்கு கேடு பயக்கும் விதமாக மாறியுள்ளது. ஆனால், தற்பொழுது மண்பாண்ட சமையல், இயற்கை உணவுகள் என்று மீண்டும் நமது பாரம்பர்ய முறைகள் களைகட்டத் தொடங்கியுள்ளது.  இதில் நாட்டுக்கோழி மிகுந்த வணிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை அறிந்த கரூர் மாவட்டவாசிகள் பலர் 25 சதவிகிதம் மானியத்தில் வங்களில் கடன் வாங்கி, நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழிலில் இறங்கியுள்ளனர்.

அப்படி நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள கரூர் மாவட்டம், தளவாபாளையத்தைச் சேர்ந்த செந்தில் மற்றும் வனஜா தம்பதியிடம் பேசினோம். ``விவசாயம் எங்களது குலத்தொழிலாக இருந்தாலும் உணவுக்கும், உடைக்கும் அல்லாடும் நிலைமையில் இருந்தோம். அதோடு, மக்களும் பிராய்லர் கோழிகளை வாங்கி சாப்பிட்டு, உடல் உபாதைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதனால், எங்களது வறுமை நிலைமையை போக்கவும், நமது பாரம்பர்யத்தைக் காக்கவும் வங்கியில் 25 சதவிகித மானியத்தில் ரூ 2 லட்சம் கடன் வாங்கி 500 சதுர அடி நிலப்பரப்பில் கொட்டகை அமைத்து 250 நாட்டுக்கோழிகளோடு தொடங்கிய தொழில் இன்று அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய வகையில் உயர்ந்து நிற்கிறது. முழுக்க முழுக்க இயற்கையான உணவுகளை வழங்கி வளர்க்கும் எங்களது நாட்டுக்கோழி முட்டைக்கு உள்ளூரிலேயே தேவைகள் அதிகமாக உள்ளது. கரூர் மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மண்பாண்ட சமையல் ஹோட்டல்கள் முளைத்துள்ளன. அவர்கள் நாட்டுக்கோழியை மட்டுமே சமைத்து கஸ்டமர்களுக்கு வழங்குகிறார்கள். அவர்களிடம் நாங்க நாட்டுக்கோழிகளை விற்கிறோம். இப்போ நல்லா இருக்கோம். பாரம்பர்யத்தைக் காத்த திருப்தியும் இருக்கு. எங்க முயற்சியை கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேரடியாக வந்து பார்வையிட்டுப் பாராட்டினார்" என்றார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!