அனுமதியின்றி சிலை திறப்பு.. குமாரகுறிச்சி கிராமத்தில் பதற்றம்!

சிலை

சிவகங்கை மாவட்டத்தில் சிலை திறப்பது தொடர்பாக இரு பிரிவினருக்கு மத்தியில் மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே குமாராக்குறிச்சி கிராமத்தில் கடந்த 20 வருடங்களாக தேவர் சிலை ஒன்று திறக்கப்படாமல் இருந்தது. இந்தச் சிலையைச் செய்வதற்காக வசூல் செய்த பணத்தை கையாடல் செய்ததாக அ.தி.மு.க பிரமுகரும் இளையான்குடி முன்னாள்  சேர்மனுமான அழகுசுப்பு என்பவர் மீது புகார் எழுந்தது. இதுவே பின்னர் ஊர் பிரச்னையாக மாறியது. அழகுசுப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து போனார்.

இந்த நிலையில், ஊர் மக்கள் இரண்டு பிரிவாக உருவெடுத்தனர். இதில் அழகுசுப்பு மகன் பாரதி தலைமையில் ஒரு கோஷ்டியினர் வெங்கலச் சிலை செய்து வைத்துள்ளனர். எங்கே வெங்கலச் சிலையை வைத்துவிடுவார்களோ என்று மற்றொரு பிரிவினர் நேற்றுமுன்தினம் இரவு அவசர அவசரமாக வெங்கல கலர் பெயின்ட் அடித்த சிலையை அதிகாலை ஊர்மக்கள்  திறந்தனர். அதனால் இளையான்குடி தாசில்தார் கண்ணதாசன், டி.எஸ்.பி மங்களேஸ்வரன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் 24 மணி நேரத்தில் சிலையை அகற்றுவது எனவும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலை இருப்பதாகவும், முறையாக அரசிடம் அனுமதி பெற்று நீங்கள் சிலை வைத்துக்கொள்ளலாம் எனவும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது என போலீஸார் 24 மணி நேரம் கெடு விதித்துள்ளனர். இதனால் அந்தக் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!