"ஆடம்பர வாழ்க்கைக்காக ஆள்கடத்தல் வேலை!" - கைதானவரின் பகீர் வாக்குமூலம் | kidnapping family in madhuranthakam area

வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (14/07/2018)

கடைசி தொடர்பு:10:56 (14/07/2018)

"ஆடம்பர வாழ்க்கைக்காக ஆள்கடத்தல் வேலை!" - கைதானவரின் பகீர் வாக்குமூலம்

மதுராந்தகம் அருகே பணத்திற்காக டைல்ஸ் கடை உரிமையாளரின் உறவினர் கடத்தப்பட்ட சம்பவம் சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். சிக்கியவர்கள் கொடுத்த வாக்குமூலம் காவல்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியில் டைல்ஸ் கடை வைத்திருக்கிறார் பாலச்சந்தர். இவரது சம்பந்தி முத்துக்குமார் என்பவர் இந்த டைல்ஸ் கடையை கவனித்துவருகிறார். கடந்த ஜூன் 30 ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று முத்துக்குமாரை அவரின் காருடன் சேர்த்துக் கடத்தியது. ‘பத்துலட்சம் ரூபாய் கொடுத்தால்தான் முத்துக்குமாரை உயிருடன் விடுவோம். இல்லையென்றால் கொலை செய்துவிடுவோம்’ என முத்துக்குமாரின் உறவினருக்கு கடத்தல்காரர்கள் போன் செய்தார்கள். வேறு வழியின்றி 10 லட்சம் ரூபாயைக் கொடுத்து முத்துக்குமார் மீட்கப்பட்டார். இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணைக்குப் பிறகு இருதினங்களுக்கு முன்பு நான்கு பேரை கைது செய்துள்ளனர். அதில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள். ஞானசேகர் என்பவரின் தாய் கங்காதேவி, ஞானசேகரின் மனைவிகள் சரண்யா, விக்டோரியா, நண்பர் சதீஷ் ஆகியோர் பிடிபட்டுள்ளனர். ஞானசேகர் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட சதீஷ் காவல்துறையிடம் கொடுத்துள்ள வாக்கு மூலம் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சதீஷ் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில், “2015 இல் இருந்து படப்பை பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறோம். வெல்டிங் செய்வதுதான் என்னோட தொழில். இரண்டு வருடங்களுக்கு முன்பு கோட்டூர் மண்டபத்தெருவில் ஒரு கார்செட் வெல்டிங் வேலை செய்தேன். அப்போது அதே தெருவில் வசிக்கும் ஞானசேகர் தனது வீட்டுக்குக் கேட் வேலைக்கு அழைத்துச் சென்றார். 10 நாட்கள் அவர் வீட்டிலேயே தங்கி வேலை செய்து கொடுத்தேன். தினமும் சரக்கும் பிரியாணியுமா சாப்பாடு போடுவார். கேட்டதைவிட இரண்டு மடங்கு கூலி கொடுத்தார். அதன் பிறகு எனக்கு நெருங்கிய நண்பனாகிவிட்டார். அவரது உறவினர், நண்பர்கள் என அவர் சொல்லும் வீடுகளில் வேலை செய்து கொடுத்தேன். வேலை நேரம் போக அடிக்கடி மதுராந்தகம் அருகே உள்ள தண்டரைபுதுச்சேரி பகுதிக்கு ஞானசேகர் வரச் சொல்லுவார். அவரது நண்பர்களுடன் ஒன்றாகவே சரக்கு அடிப்பதும், ஜாலியா இருப்பதுமாகப் பொழுதைக் கழித்தோம். ஞானசேகரின் அம்மா கங்காதேவி மற்றும் அவரது மனைவிகள் விக்டோரியா, சரண்யா, ஞானசேகரின் தம்பி சுரேஷ் ஒன்றாக இருப்பார்கள். அவர்களிடம் நான் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தேன்.

மதுராந்தகம்

சொகுசு கார்களும் புல்லட், ஆக்டிவா உள்ளிட்ட இருசக்கர வாகனங்களும் அவர்களிடம் இருந்தன. சொகுசு வாகனங்கள், பெரிய வீடு, ஜாலியாக இருக்க இரண்டு மனைவிகள் என  ஞானசேகரின் சொகுசான வாழ்க்கை எனக்குள் ஆசையைத் தூண்டியது. அந்த வாழ்க்கை எனக்கும் கிடைக்கும் என அவருடன் இருந்தேன். ஒரு மாதத்துக்கு முன்பு ‘இவ்வளவு பணம் எங்கிருந்து சம்பாதிக்கிறாய்? என்னையும் உன்னுடன் சேர்த்துக்கொள்’ எனச் சொன்னேன். ‘திருட்டு, கொள்ளை, ஆள் கடத்தல் வேலைதான் செய்யுறோம்’னு ஞானசேகர் சொன்னதை என்னால் ஆரம்பத்தில் நம்ப முடியவில்லை. பின்னர் அவரது நண்பர்களைக் கொண்டு இதை உறுதிப்படுத்திக்கொண்டேன். பிறகு என்னையும் சேர்த்துக்கொள்ளச் சொன்னேன். சரி என்று சொன்ன ஞானசேகர் 50,000 ரூபாயை என் கையில் கொடுத்து ‘இத கையில வச்சிக்கோ, ஒரு பெரிய புராஜக்ட் இருக்கு. தேவைப்படும்போது உன்னைக் கூப்பிடுகிறேன்’னு சொல்லி அனுப்பிட்டார்.

கடந்த 29-ம் தேதி எனக்கு போன் செய்த ஞானசேகர், ‘ஒரு பெரிய புராஜக்ட் இருக்குன்னு சொன்னேன்ல. அதுக்கு நேரம் வந்துவிட்டது’ எனச் சொல்லி மதுராந்தகம் அருகே உள்ள தண்டரைபுதுச்சேரிக்கு வரச்சொன்னார். அவரது நண்பர்களுடன் காரில் என்னை ஏற்றிக்கொண்டு சென்றார்கள். அங்கே உள்ள ஒரு கடையில் பிரியாணி சாப்பிட்டோம். அப்போது அவரது மனைவிகளுக்குப் போன் செய்து வரச்சொன்னார். ஞானசேகரின் மனைவி இருவரையும் டூ வீலரில் தனியாகப் போகவிட்டோம். நாங்கள் காரில் பின் தொடர்ந்தோம். அவர்கள் இருவரும் மதுராந்தகம் அடுத்துள்ள அரவிந்த் டைல்ஸ் கடையில் நுழைந்து, டைல்ஸ் வாங்க விசாரிப்பதுபோல அங்கிருந்த பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது, 'இவரைத்தான் நாம் கடத்தப்போறோம்' என ஞானசேகர் சொன்னார். பிறகு அனைவரும் வீட்டுக்கு வந்துவிட்டோம்.

எப்படிக் கடத்த வேண்டும் என 7 பேரும் திட்டமிட்டோம். இந்த புராஜக்ட் முடியும்வரை ஒருத்தரை ஒருத்தர் பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாது. எல்லோரும் ஒன்றாகப் பயணிக்கக் கூடாது என முடிவெடுத்தோம். இதற்காகத் தனித்தனியாக வாகனங்களைத் தயார் செய்தோம். இருட்டியதும் டைல்ஸ் கடைக்கு அருகே எல்லோரும் தனித்தனியாகக் காத்திருந்தோம். நாங்கள் நினைத்தது போலவே 7 மணிக்குக் கடையை மூடிவிட்டு அந்தப் பெரியவர் காரில் ஏறிப் புறப்பட்டார். அப்போது எதிர்த்திசையில்  எங்களின் ஒரு காரை கொண்டு சென்று இடிப்பது போல நிறுத்தினோம். காரை இடித்துவிட்டதாக தகராறு செய்யத் தொடங்கிதும், 'இடிக்கவில்லை' என வாதிட்டார் அந்தப் பெரியவர்.

மதுராந்தகம்

உடனே 'கீழே இறங்கி வந்து பாருங்கள்' என்றோம். கீழே இறங்கியவுடனே கத்தியை அவரது இடுப்பில் வைத்து மிரட்டி, அவர் வந்தக் காரிலேயே கடத்தினோம். சில கிலோமீட்டர் தூரம் சென்றதும் காரை நிறுத்தி அவர் பெயரை விசாரித்தோம். பிறகு துணியால் வாயை அடைத்தோம். பிறகு வையாவூர் அருகே கொண்டு சென்று, 'எங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வேண்டும். வீட்டுக்குப் போன் போடு. இல்லையென்றால், இங்கேயே கொளுத்தி விடுவோம்' என்று மிரட்டினோம். பிறகு அவரது சம்பந்தி பாலச்சந்தருக்கு போன் செய்தார். 'வெளியே சொல்லக்கூடாது. நாங்கள் கேட்ட பணம் கொடுக்கவில்லை என்றால், இவரைக் கொன்றுவிடுவோம்' என்று சொன்னோம். பிறகு எங்கள் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்தோம். பிறகு மேல்மருவத்தூர் அருகே உள்ள ராமாபுரம் காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்றோம். முத்துக்குமார் வாயைக் கட்டி இருந்ததால், அவர் இறந்துவிடுவார் என்று பயந்தோம். நல்லவேளை அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. மீண்டும் காலை 7 மணிக்கு அவரது சம்பந்திக்கு போன் செய்தோம். ‘ஞாயிற்றுக்கிழமை என்பதால், பேங்க் லீவு. நாங்களும் பணத்தைத் திரட்டிக் கொண்டு இருக்கிறோம்’ என்றார்கள். அப்போது எதிர் முனையில் பேசிய முத்துக்குமாரின் மகளிடம், ‘போலீசுக்குப் போனா குடும்பத்தையே காலி செய்துவிடுவோம்’ என்றோம். அதன்பிறகு திங்கட்கிழமை 11 மணிக்கு பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள்.

மதுராந்தகம் ஆட்கடத்தல்

‘பெண்கள் யாரும் வரக்கூடாது. ஆண்கள் இரண்டு பேர்தான் வரவேண்டும். எங்கு எப்போது வரவேண்டும் என்பதை பிறகு தெரிவிக்கிறோம்’ என்றோம். திங்கட்கிழமை காலையில் பாக்கம் ரயில்வே நிலையம் அருகே வரச்சொல்லி, பின்பு அங்கிருந்து மதுராந்தகம் பைபாஸ் பாலத்துக்குக் கீழ் வரவழைத்து பணத்தை வாங்கினோம். அதன் பிறகு முத்துக்குமாரை விடுவித்தோம். உடனே அதிலிருந்து எல்லோருக்கும் 20,000 ரூபாய் செலவுக்குக் கொடுத்தார் ஞானசேகர். பிறகு அன்றிரவு ஞானசேகரின் அம்மா மீதம் 80,000 ரூபாய் கொடுத்தார். அன்றிரவே எனக்குப் போன் செய்த ஞானசேகர், ‘போலீஸ் நம்மைத் தேடுது. எல்லோருடைய சிம்கார்டையும் உடைத்துப் போட்டுவிட்டுத் தலைமறைவாக சென்றுவிடுங்கள்’ எனச் சொன்னார் ஞானசேகர். அதன்படி வெளியே செல்லும்போதுதான் பிடிபட்டோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், ஞானசேகர் உட்பட அவனது 6 கூட்டாளிகள் தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். இவர்களைச் சீக்கிரம் பிடித்துவிடுவோம் என்கின்றனர் காவல்துறையினர். ஞானசேகர் கைதுக்குப் பிறகு ஒரு பெரிய நெட்வொர்க் சிக்க வாய்ப்பு இருக்கிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்