தூத்துக்குடியில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு; அகழாய்வு செய்ய மக்கள் கோரிக்கை! | The discovery of the tunneled elderly lobes; Request people to excavate!

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (14/07/2018)

கடைசி தொடர்பு:11:20 (14/07/2018)

தூத்துக்குடியில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு; அகழாய்வு செய்ய மக்கள் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள சிவகளை பகுதியில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான அடையாளமான முதுமக்கள் மண் தாழிகள் புதைந்துள்ளன. எனவே, இப்பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என  மக்கள் அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகழாய்வு

இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகத்தைவிட தொன்மையானது எனவும் வரலாற்று காலத்துக்கும் முற்பட்டது எனவும் தொல்லியல் ஆராய்ச்சி மையங்களிலும் அகழ்வாராய்ச்சிகளிலும் பரவலாகப் பேசப்படுவது `ஆதிச்சநல்லூர் நாகரிகம்'. உலகம் முழுவதும் உள்ள கலாசாரம், பண்பாடு, அரசுமுறை, படை, வாழ்க்கை, கலை என அனைத்திலும் இந்நாகரிகம் முதன்மையானது.

ஆதிச்சநல்லூர்

``உலக நாகரிகத்தின் தொட்டில்" எனக் கருதப்படும் ஆதிச்சநல்லூர், சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதற்கு முன்பே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நாகரிகம் ஆகிய நாகரிகத்துக்கு முந்தயதுதான் ஆதிச்சநல்லூர் நாகரிகம் என இவற்றை ஆய்வு செய்த வங்காள அறிஞர் பானர்ஜியே தெரிவித்துள்ளார். மேலும், இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள், ‘மெசபடோமியா’ பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை ஒத்துள்ளதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. 

ஆதிச்ச நல்லூர் நாகரிகம்

தாமிரபரணி பாய்ந்தோடும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரைப் போலவே, ஸ்ரீவைகுண்டத்துக்கு அருகில் உள்ள சிவகளை கிராம பகுதியில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகிறது. இக் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மண் பரம்பில் (மேடு) பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்தப் பரம்பில் பல இடங்களில் முதுமக்கள் மண் தாழிகள் வெளியில் தென்படுகிறது. பலவும் ஆங்காங்கே புதைந்து கிடக்கிறது. மேலும், மண்தாழிகள் அருகில் எலும்புகளும் குதிரையின் லாடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது ஆதிச்சநல்லூர் மண்பரப்பைப் போலவே காணப்படும் மேட்டுப்பகுதி ஆகும். இரு புறங்களிலும் ஆதிச்சநல்லூரைவிட அதிகமான நீள, அகலமுடைய பரந்த நிலப்பரப்பு ஆகும். எனவே, இப்பகுதியில் தொல்லியல் மற்றும் அகழாய்வுத் துறையினர் அகழ்வராய்ச்சி செய்ய வேண்டும். இதில் கிடைக்கும் பொருள்களை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்க வேண்டும் என, பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஆதிச்சநல்லூரின் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களான அகரம், வல்லநாடு, வடக்கு வல்லநாடு, முறப்பநாடு, வசவப்பபுரம், கருங்குளம், விட்டிலாபுரம், கொங்கராயக்குறிச்சி, திருவைகுண்டம்,  திருப்புளியங்குடி,  புதுக்குடி,  வெள்ளூர், கால்வாய், அப்பன்கோவில், மாறமங்கலம் ஆகிய ஊர்களிலும், கடம்பூர் – நாரைக்கிணறு சாலையில் உள்ள உப மின்நிலையம் பின்புறம் உள்ள பகுதியிலும், ஆதிச்சநல்லூரைப் போன்றே முதுமக்கள் தாழிகள் பல காணக் கிடைக்கின்றன. எனவே, இந்த 16 ஊர்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க