விம்பிள்டன் டென்னிஸ்: 6 மணி நேரம் 35 நிமிடங்கள் நீடித்த பரபரப்பு ஆட்டம்! | Wimbledon Tennis 2018

வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (14/07/2018)

கடைசி தொடர்பு:12:44 (14/07/2018)

விம்பிள்டன் டென்னிஸ்: 6 மணி நேரம் 35 நிமிடங்கள் நீடித்த பரபரப்பு ஆட்டம்!

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜூலை 2 -ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் நாளை முடிவடைகிறது. இன்று நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் செரினா வில்லியம்ஸ் மற்றும் கெர்பர் மோத உள்ளனர். இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. 

விம்பிள்டன் டென்னீஸ்

முன்னதாக நேற்று ஆண்கள் ஒற்றையருக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் ஆண்டர்சன் மற்றும் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் மோதினர். தொடக்கம் முதலே இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. இருவரும் தளராமல் இறுதி வரை போராடினர். டை பிரேக் வரை சென்ற முதல் செட்டை ஆண்டர்சன் 7-6 (8-6) கைப்பற்றினார். இதற்கு செட்டில் பதிலடி கொடுத்தார் இஸ்னர். மீண்டும் டை பிரேக்கர் வரை சென்ற செட்டை 6-7(5-7) என்ற கணக்கில் இஸ்னர் வென்றார். 3-வது செட்டை இஸ்னர் மீண்டும் வெல்ல, நான்காவது செட்டை கைப்பற்றினார் ஆண்டர்சன்.

ஜான் இஸ்னர்

இருவரும் இரண்டு செட்டைக் கைப்பற்றியதால் இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போவது யார் என்பதை முடிவு செய்யும் இறுதி செட் தொடங்கியது. இருவரும் வெற்றிக்காக கடுமையாகப் போராடினர். இறுதி செட் என்பதால் இதில் டை-பிரேக் முறை கடைப்பிடிக்கப்படாது. இதனால் இருவரும் மாறி மாறி செட்களை கைப்பற்றியதால் ஆட்டம் தொடர்ந்துகொண்டே சென்றது. இறுதி செட் மட்டும் 2 மணி நேரம் 50 நிமிடம் நீடித்தது. இறுதியில் ஆண்டர்சன் 26-24 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஒட்டுமொத்தமாக இந்த முதல் அறையிறுதிப் போட்டி மட்டும் 6 மணி நேரம் 35 நிமிடங்கள் நீடித்தது. முதல் போட்டியின் தாமதத்தால், ஜோகோவிக் மற்றும் நடால் மோதும் இரண்டாவது போட்டியும் தாமதமாகத் தொடங்கியது. குறைவான நேரமே இருந்ததால், போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. ஆட்ட முடியும் நேரம் ஜோகோவிக் 6-4, 3-6, 7-6(11-9) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளார்.