வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (14/07/2018)

கடைசி தொடர்பு:14:40 (14/07/2018)

கணவர் சவாலை ஏற்று இயற்கை கத்திரி சாகுபடியில் சாதிக்கும் அமுதா!

  இயற்கை முறையில் கத்தரி சாகுப்டி செய்யும் அமுதா

'உன்னால் முடியாது' என்று சொன்ன கணவரின் சவாலை ஏற்று, இயற்கை கத்திரிக்காய் சாகுபடியில் மாசம் ரூபாய் ஒரு லட்சம் வருமானம் பார்த்து அசத்துகிறார் அமுதா. அதோடு, பூச்சிகளைப் பிடிக்க உலகத்தில் யாருமே செய்யாத முறையை தனது கணவரின் உதவியோடு கண்டுபிடித்து, அதைப் பயன்படுத்துகிறார். இயற்கை முறையில் சாகுபடி செய்யபடும் கத்திரிக்காய் என்பதால், இவர் தோட்டத்தில் விளையும் கத்திரிக்காயை வாங்க நீ முந்தி நான் முந்தி என்று வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கும் அளவுக்கு சந்தை வாய்ப்பும் சிறப்பாக இருப்பதாக பெருமிதப்படுகிறார். 

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள சேமங்கியைச் சேர்ந்த மகுடபதி என்பவரின் மனைவி அமுதா. எம்.ஏ,பி.எட் முடித்த இவர் முதலில் தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றினார். இப்போது அவரை சந்தித்தபோது, கத்திரிச் செடிகளைப் பரிவோடு தடவியபடி பேசினார். 


 அமுதா

``நான் பொறந்த குடும்பம், காலடி எடுத்து வைத்த குடும்பம் என்று எல்லாமே விவசாயக் குடும்பங்கள்தான். எம்.ஏ., பி.எட் முடித்த நான், கல்யாணம் ஆகி இங்க வந்தததில் இருந்து போன வருஷம் வரை தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்தேன். என் கணவரும் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயர். ஆனால், அவர் வேலைக்குப் போகாமல் எங்களுக்கு இருக்கும் ஆறு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்த்தார். காவிரி ஆற்றுப் பாசனம். அதனால், மல்லி, கரும்பு என்று மாற்றி மாற்றி பயிர் செஞ்சுகிட்டு இருந்தார். நான் ஆசிரியையாக இருந்தாலும், எனக்கும் விவசாயத்தின் அத்தனை வேலைகளும் அத்துப்படி. அப்பப்ப கூடமாட அவருக்கு ஒத்தாசை பண்ணிக்கிட்டு இருந்தேன். என் கணவர் செயற்கை உரங்களை தெளித்துதான் விவசாயம் பார்த்தார். அது எனக்குப் பிடிக்கலை. அடிக்கடி அவரோடு வாக்குவாதம் பண்ணுவேன். ``மனுஷன் தண்ணி, சிகரெட் அடிக்க வேண்டியதில்லை. நீங்கள் இப்படி செயற்கை முறையில் பண்ற பொருள்களை சாப்பிட்டாலே சகல வியாதிகளும் ஏற்படும்'ன்னு சொல்வேன். ஒருகட்டத்துல கோபமான அவர், 'விவசாயம் பார்க்கிறது அவ்வளவு ஈஸி இல்லை. செயற்கை உரங்களைப் பயன்படுத்தியே வெள்ளாமையில லாபம் பார்க்க முடியலை. இதுல, இயற்கை முறையில் விவசாயம் பண்ணினா துண்டை தூக்கி தலையில போட்டுக்க வேண்டியதுதான்'னு சொன்னார்.

நான் விடாமல் போராடவும், 'வேணும்ன்னா நீ இயற்கை விவசாயம் பண்ணி லாபம் பண்ணிக் காட்டு. நான் மாறுறேன்'ன்னு சவால் விட்டார். 'கருத்து சொன்னதுக்கு தண்டனையா?'ன்னு நான் முதல்ல திகைச்சுப் போயிட்டேன். இருந்தாலும், உட்கார்ந்து யோசிச்சதுல, 'சொல்றதைவிட செய்வதே சிறந்த வினை'ன்னு புரிஞ்சுச்சு. அதனால், இயற்கை முறையில் இரண்டரை ஏக்கர் நிலத்துல கத்திரி பயிரிட்டேன். முதல்ல பலத்த நஷ்டம். ஆனால், அதன்பிறகு சரியான முறையில் கடின உழைப்போடு கத்திரி பயிரிட்டேன். இப்போ மாசம் ஒரு லட்சம் லாபம் பார்க்கிறேன். `பெண்களால எதையும் செய்ய முடியும்'ன்னு இப்போ என் கணவர் என்னை மெச்சுகிறார்" என்றார் மகிழ்ச்சியாக!