வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (14/07/2018)

கடைசி தொடர்பு:15:40 (14/07/2018)

`கனவு ஆசிரியர்' விருது வாங்கிய தனபாலின் மலைக்க வைக்கும் முயற்சிகள்!

கோயமுத்தூர் பி.எஸ்.ஜி டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் இருந்து `கனவு ஆசிரியர்' விருதை வாங்கி இருக்கிறார் ஆசிரியர் தனபால். கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலையப்பள்ளியில் பணியாற்றி வரும் இவர் செய்த சாதனைகளைக் கேட்டால் மலைப்பை ஏற்படுத்துகிறது.

கனவு ஆசிரியர் தனபால்

நம்மிடம் பேசிய அவர், ``இதுவரை எங்க பள்ளியில் படித்த 295 மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கி, சான்றுகள் வாங்க வச்சுருக்கேன். எங்கள் மாணவர்கள் 12 ஆண்டுகளில் 16 அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்துள்ளனர். இங்கு படித்த 4 மாணவர்கள் ஜப்பான் அறிவியல் கருத்தரங்கத்துக்குச் சென்று வந்திருக்கிறார்கள். ஒரு மாணவர் ஜப்பானில் அறிவியல் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கிறார். மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் இதுவரை 112 அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்றிருக்கிறோம். 269 மேடைகளில் அறிவியல் வெற்றிப் பயணம் செய்திருக்கிறோம். 345 மாணவர்கள் மாவட்டம், மாநிலம், தென்னிந்திய, தேசிய, சர்வதேச அளவில் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றுள்ளார்கள். அவற்றில் 27 முதல் பரிசும்,17 இரண்டாம் பரிசுகளும், 8 மூன்றாம் பரிசுகளும் வாங்கி இருக்கிறோம். இதைதவிர, 29 தங்கப் பதக்கம்,13 வெள்ளிப்பதக்கம், 5 வெண்கலப் பதக்கம், 28 கோப்பைகள், 28 விருதுகள் வாங்கி இருக்கிறோம். மாணவர்களில் அறிவியல் ஆர்வம் பற்றி இதுவரை 3 குறும்படங்கள் எடுத்துள்ளோம். 11 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்த்துள்ளோம். 

பள்ளியின் முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்களின் பங்களிப்பில் இங்கு ஒரு லட்சம் ரூபாயில் இளம் விஞ்ஞானிகள் அறிவியல் ஆய்வகத்தை அமைத்துள்ளோம். தமிழ்நாட்டில் வேறு எந்த அரசுப்பள்ளியிலும் விஞ்ஞானிகள் அறிவியல் ஆய்வகம் இல்லை. ஜப்பான் சென்று வந்த இளம் விஞ்ஞானி மாணவன் ம.சதிஷ்குமாருக்கு மணவாடியில் நன்கொடையாளர்கள் மூலம் வீடு கட்டி தரப்பட்டுள்ளது.

தென்னிந்திய அளவில் தொடர்ந்து 4 ஆண்டுகள் ( 2014 - 17) பங்கேற்று தமிழகத்துக்கு இரண்டாம் இடம் பெற்று சாதனை செய்துள்ளோம். இதைதவிர, டாக்டர் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாரித்து, 950 பள்ளி, கல்லூரிகளுக்கு கட்டணமின்றி 1050 டி.வி.டி வழங்கப்பட்டு, 6,00,000 மாணவர்கள் மனதில் கலாம் லட்சியக் கனவுகள் பற்றி விழிப்பு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம். 

நானும், மாணவர்களும் அறிவியல் படைப்புகளுக்காக இதுவரை 56,104 கி.மீ தூரம் அறிவியல் பயணம் மேற்கொண்டுள்ளோம். 6 - 12-ம் வகுப்பு மாணவர்கள் எளிதில் இயற்பியல் பாடம் புரிந்து படிக்கும் வகையில்,100 எளிய அறிவியல் சோதனைகள் - இன்சுவை இயற்பியல் டி.வி.டியை வெளியிட்டுள்ளோம். இத்தனை விஷயங்களையும் மாணவர்கள், சக ஆசிரியர்கள், ஊர் மக்கள், முன்னாள் மாணவர்கள் உதவியோடு சிறப்பாக செய்தோம். இதனால், எனக்கு கனவு ஆசிரியர் வழங்கி அரசு கௌரவித்துள்ளது. இன்னும் என்னை வேகமா இந்த விருது செயல்பட வச்சுருக்கு" என்றார் தன்னடக்கமாக!.