``சட்டப்பேரவைக்கு வருவோம்; தடுத்தால்...” மீண்டும் மிரட்டும் பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்கள்

``புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வருவோம்” என்று மீண்டும் மிரட்டத் துவங்கியிருக்கிறார்கள் பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்கள்.

பாஜக

புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் பரிந்துரையின்றி பா.ஜ.க-வைச் சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய மூன்று பேரை எம்.எல்.ஏ-க்களாக நியமித்தது மத்திய பா.ஜ.க அரசு. அதே வேகத்தில் அவர்கள் மூவருக்கும் ஆளுநர் மாளிகையில் ரகசியமாக பதவிப் பிரமாணத்தைச் செய்து வைத்தார் ஆளுநர் கிரண்பேடி. இந்த நியமனத்தை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம். அதையடுத்து மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்தனர்.

ஆனால், சட்டப்பேரவைக்குள் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார் சபாநாயகர் வைத்திலிங்கம். அதையடுத்து முதல்வரின் பாராளுமன்றச் செயலரும், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்களில் ஒருவருமான லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கு நீதிபதிகள் சிக்ரி மற்றும் அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களையும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், அப்போது எந்தப் பதிலையும் தெரிவிக்காத நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

நியமன எம்.எல்.ஏக்கள்

இந்நிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், வருகின்ற 19-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர் நீதிபதிகள். அதைத்தொடர்ந்து, ``மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு உச்சநீதிமன்றம் எந்தத் தடையையும் விதிக்கவில்லை. எனவே, அவர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம்” என்று வாட்ஸ்-அப் மூலம் செய்தி வெளியிட்டிருந்தார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. அதேபோல இன்று காலை வார இறுதி ஆய்வின்போது, ``புதுச்சேரி சட்டமன்றத்துக்குள் செல்வதற்கு மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களுக்கும் சுதந்திரம் உள்ளது. அதையும் மீறி தடை செய்தால் அவர்கள் நீதிமன்றத்தை நாடி அவமதிப்பு வழக்கைத் தொடரலாம்” என்றார்.

கிரண்பேடி

ஆளுநர் கிரண்பேடியின் இந்தக் கருத்துகளைத் தொடர்ந்து இன்று சட்டப்பேரவைக்கு வந்த நியமன எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேரும் சட்டப்பேரவை செயலரிடம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகலை வழங்கி மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நியமன எம்.எல்.ஏ சாமிநாதன், ``நியமன எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேரும் சட்டப்பேரவையில் பங்கேற்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால் நாங்கள் திங்கள்கிழமை சட்டப்பேரவைக்குள் வருவோம். சபாநாயகர் எங்களைத் தடுத்தால் அது நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் என்பதால், அவர்கள் எங்களை அனுமதிப்பார்கள்” என்றார். புதுச்சேரி அரசியலில் நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!