வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (14/07/2018)

கடைசி தொடர்பு:17:00 (14/07/2018)

``மாதிரி ஆய்வகத்தைப் பார்க்க வாருங்கள்!" − மக்களுக்கு அழைப்பு விடுக்கும் நியூட்ரினோ திட்ட இயக்குநர்

தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே உள்ள அம்பரப்பர் மலையில் செயல்படுத்தப்பட இருக்கும் நியூட்ரினோ திட்ட இயக்குநர் விவேக் தத்தார் இன்று தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

விவேக் தத்தா


அப்போது பேசிய அவர், ``நியூட்ரினோ திட்டம் மக்களுக்கான திட்டம். அதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. மக்களுக்கான சந்தேகங்களைத் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் எதிர்புரத்தில் வடபழஞ்சி என்ற இடத்தில் மாதிரி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். முழுக்க முழுக்க இந்திய ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. நியூட்ரினோ ஆய்வகத்தில் இருப்பது போன்ற இந்த மாதிரி 70 கிலோ டன் எடை கொண்டது. இதை யார் வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம். அங்கிருக்கும் ஆய்வு மாணவர்களிடம் தங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். தற்போது அந்த உணர்கருவியானது மீயோன் துகள்களை ஆய்வு செய்துவருகிறது. அதை நேரடியாகப் பார்வையிடலாம். மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியல் கட்சியினர் அனைவரும் மாதிரி நியூட்ரினோ ஆய்வகத்தைப் பார்வையிட வர வேண்டும். இதை எனது அழைப்பாக எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில், விஞ்ஞானி த.வி வெங்கடேஸ்வரன் உடன் இருந்தார். அவர் பேசும்போது, ``நியூட்ரினோ குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. பகுத்தறிவு மிகுந்த தமிழ்நாட்டில் பொய் அறிவியல் வாதங்கள் பரப்பப்படுகிறது. அதை மக்கள் நம்பக்கூடாது. தேனி மக்கள் மதுரையில் அமைந்துள்ள மாதிரி நியூட்ரினோ ஆய்வகத்தை வந்து நேரில் பார்க்க வேண்டும்" என்றார்.