வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (14/07/2018)

கடைசி தொடர்பு:17:40 (14/07/2018)

`பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கக்கூடாது - பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!

பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

எடப்பாடி

60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு இந்திய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு நாடு முழுவதும் உயர்கல்வி விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதுடன், கல்லூரிகளுக்குத் தேவையான நிதியையும் வழங்கி வருகிறது. இதற்காக இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம் 2018 என்ற புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, யு.ஜி.சி கலைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தற்போது பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கக் கூடாது எனக் கூறி பிரதமருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம்

அதில் `இந்திய உயர்கல்வி ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கும் நடவடிக்கைகளில் மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசைப் பொறுத்தவரை, ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் பல்கலைக்கழக மானியக்குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே, அதை கலைக்கவேண்டிய தேவையில்லை. தமிழக அரசு சார்பில் இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டத்தை ஏற்கமுடியாது. நடைமுறையிலிருக்கும் பல்கலைக்கழக மானியக்குழுவையே தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.