வெளியிடப்பட்ட நேரம்: 18:02 (14/07/2018)

கடைசி தொடர்பு:18:07 (14/07/2018)

குடித்துவிட்டு ஆட்டோ இயக்கினால் லைசென்ஸுடன் வாகன அனுமதியும் ரத்து!

கடலூரில் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கடலூர் காவல் துறை கண்காணிப்பாளர் லாமேக் தலைமை தாங்கினார். போக்குவரத்து ஆய்வாளர் மதியழகன், உதவி ஆய்வாளர் சதிஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

ஆட்டோ ஓட்டுநர்கள்

இதில் ஷேர் ஆட்டோவில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றுவது, குடித்துவிட்டு வாகனத்தை இயக்குவது, ஓட்டுநர் உரிமம், ஆட்டோ உரிமம் இல்லாமல் வண்டிகளை இயக்கக் கூடாது. மேலும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும். சாலை விதிகளை மதிக்க வேண்டும். வெளியூர் உரிமம் வைத்துக்கொண்டு கடலூரில் ஆட்டோ இயக்கக் கூடாது என ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

விதிமுறைகளை மதிக்காமல் ஓட்டுநர்கள் ஆட்டோவை இயக்கினால் ஆட்டோ உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்தனர். இந்தக் கூட்டத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் 550 பேர் ஆட்டோவுடன் கலந்துகொண்டனர். கடலூரில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளைச் சரியாக கடைப்பிடிப்பது இல்லை என பொது மக்களிடம் கடுமையான குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.