நிரம்பி வழியும் கர்நாடக அணைகள் - ஒரு லட்சம் கனஅடி காவிரி நீர் திறப்பு!

காவிரிக்காகத் தமிழகமும், கர்நாடகாவும் நூற்றாண்டுகள் கடந்து சட்ட ரீதியாக மோதிக்கொண்டாலும், இயற்கையின் கருணையால் காவிரி தமிழகத்தை நோக்கி வருவதை எந்தச் சட்டமும் தடுத்து நிறுத்தவில்லை. கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்குப் பருவ மழையால் காவிரி குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹேமாவதி, ஹேரங்கி, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய நான்கு அணைகள் நிரம்பி தமிழகம் நோக்கி காவிரி ஆறு பாய்ந்தோடி வருகின்றது. 

காவிரி கேஆர்எஸ்

இதில், காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் அமைந்துள்ள (கே.ஆர்.எஸ்) கிருஷ்ணராஜ சாகர் அணை நான்கு வருடங்களுக்குப் பிறகு முழு கொள்ளளவான 124.80 அடியை இன்று காலை எட்டியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 41,961 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டுள்ளது. 3,929 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. முழு கொள்ளளவு எட்டிவிட்டதால் அணையின் பாதுகாப்பு கருதி 40 ஆயிரம் கனஅடி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பாக, கடந்த 2014-ல் கே.ஆர்.எஸ் அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டியது. 

மற்றொரு முக்கிய அணையான கபினி அணை கடல் மட்டத்திலிருந்து 2,284.00 அடி நீர்மட்டம் கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி கபினி அணை 2,282.82 அடியை எட்டிவிட்டது. கபினி அணைக்கு விநாடிக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையிலிருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி, கே.ஆர்.எஸ். அணைகளிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் நேரடியாகத் தமிழகத்தை வந்தடையும் என்பதால், இரு அணைகளிலிருந்து மொத்தம் விநாடிக்கு 1,10,000 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்துக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!