வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (14/07/2018)

கடைசி தொடர்பு:20:50 (14/07/2018)

`குப்பை இல்லா கும்பகோணம்' - காவிரி ஆற்றிலிருந்து 16 டன் குப்பைகளை அகற்றிய கல்லூரி மாணவர்கள்!

கும்பகோணம் காவிரி ஆற்றில் ஆறு கிலோமீட்டரில் இருந்த 16 டன் குப்பைகளை அகற்றி கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்தனர். `குப்பை இல்லா கும்பகோணம்' என்ற திட்டம் கும்பகோணத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை மக்களுக்குத் தெரியப்படுத்தவும் மற்றும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து காவிரி ஆற்றில் மாணவ, மாணவிகளைக் கொண்டு குப்பைகள் அகற்றப்பட்டதாகக் கூறினர்.

மாணவர்கள்

கும்பகோணம் நகராட்சி, சிட்டி யூனியன் வங்கி, கும்பகோணம் கிங்ஸ் ரோட்டரி சங்கம், அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து கொட்டையூர் முதல் மணஞ்சேரி வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆற்றில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்தக் குப்பைகள் அகற்றும் பணியில் கல்லூரி மாணவர்கள் 400 பேர், நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் 60 பேர் ஈடுபட்டனர். இதில் பிளாஸ்டிக் பைகள், தேவையில்லாத துணிகள், காகிதம், பாட்டில்கள், செடி கொடிகள் போன்றவற்றை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனித்தனியாக பிரித்து அகற்றப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி கூறுகையில், ``குப்பையில்லா கும்பகோணம் என்பதை நகராட்சி நிர்வாகம் அறிவித்தால் மட்டும் போதாது பொதுமக்களும் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் குப்பைகளின் அளவைக் குறைக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தக் கூடாது  என்றும், அதோடு குப்பைகள் கொட்டுவதற்காக வைக்கப்பட்ட தொட்டியில்தான் குப்பைகளைக் கொட்ட வேண்டும். ஆறு மற்றும் பொது இடங்களில் கொட்டக்கூடாது  என்று தொடர்ந்து விழிப்பு உணர்வு மூலம் பொதுமக்களுக்கு வலியுறுத்தபட்டு வந்தது. இதையடுத்து காவிரி ஆற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆற்றில் காணப்பட்ட குப்பைகள் தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு கல்லூரி மாணவர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தனித்தனியாக பிரித்து எடுக்கப்பட்டது. காவிரி ஆற்றில் 6 கிலோ மீட்டர்  தூரத்தில் 16 டன் குப்பைகள் அகற்றப்பட்டன" என்றார்.

மாணவர்கள்

சுத்தம் செய்த மாணவி ஒருவரிடம் பேசினோம், ``காவிரி ஆறு என்பது நம் டெல்டா  மாவட்டத்தை உயிருடன் வைத்திருக்கும் இதயம் போன்றது. காவிரி ஆற்றில் தண்ணீர் வந்தால்தான் விவசாய நிலங்கள் செழிக்கும். இப்படிபட்ட காவிரி ஆற்றைக் காப்பது நம் கடமை. இதை சுத்தம் செய்ய அழைத்ததும் கடமைக்காக வராமல் உணர்வுடன்  வந்து அனைவரும் குப்பைகளை அகற்றினோம். காவிரியை மட்டும் இல்லை பூமியையும் குப்பைகளில் இருந்து அக்கறையுடன் காக்க வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க