`சேதப்படுத்தப்பட்ட கொடிக் கம்பம்' - போராட்டத்தில் குதித்த பா.ஜ.க-வினர்!

கரூரில் பா.ஜ.க கொடிக் கம்பத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் அக்கட்சியினர் சாலை மறியல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

பாஜகவினர்

கரூர் அண்ணாநகரில் பா.ஜ.க கொடி நடப்பட்டிருந்தது. இந்தக் கொடியை இரவோடு இரவாக யாரோ மர்ம நபர்கள் வெட்டிச் சாய்த்ததோடு, அந்தக் கம்பத்தில் இருந்த பா.ஜ.க கொடியை அருகில் ஓடும் சாக்கடையில் எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். இதை அறிந்த பா.ஜ.க-வினர் அக்கட்சியின் நகரத் தலைவர் செல்வம் தலைமையில் அங்கே திரண்டனர். 'பா.ஜ.க கொடிக்கம்பத்தைச் சாய்த்ததோடு, கொடியை சாக்கடையில் எறிந்த தீயசக்திகளைக் கைது செய்' என்ற கோஷத்துடன், சாலை மறியலில் அமர்ந்துவிட்டனர். இதனால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கரூர் நகர காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ், 'கொடிக்கம்பத்தையும், கொடியையும் சேதப்படுத்திய மர்ம நபர்களை இரண்டு நாள்களில் கைது செய்கிறோம்' என்று உத்தரவாதம் கொடுத்தார். அதன்பிறகே சாலைமறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். அதோடு, கொடிக்கம்பத்தைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கரூர் நகர காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்தனர். இதனால்,எஃப்.ஐ.ஆரும் போடப்பட்டது. 

இதுபற்றி, பா.ஜ.க கட்சியின் கரூர் நகரத் தலைவர் செல்வத்திடம் பேசினோம், ``முக்கியமான இடத்தில் அந்தக் கொடி இருந்தது. யாரோ விஷமிகள் கொடிக்கம்பத்தை உடைத்ததோடு, கொடியை சாக்கடையில் எறிந்துள்ளனர். இது திட்டமிட்டமிட்டு நடத்தப்பட்ட கொடுமை. இதை நாங்க சும்மா விடப்போவதில்லை. இப்படிக் கொடியை சேதப்படுத்தினால், எங்களை முடக்கிவிடலாம்னு யாரோ மனப்பால் குடிக்கிறார்கள். அது நடக்காது. அவர்கள் பா.ஜ.க கொடியை வெட்டி வீழ்த்த வீழ்த்த நாங்க நட்டுக்கிட்டே இருப்போம். வரும் செவ்வாய்க்கிழமை இங்கே திருச்சி கோட்டப் பொறுப்பாளர் கருப்பு முருகானந்தத்தை கொடி ஏற்ற வைத்து, தெருமுனைக் கூட்டம் நடத்த இருக்கிறோம். சிசிடிவி வீடியோ புட்டேஜை வைத்து இரண்டு நாள்களில் கொடிக்கம்பத்தைச் சேதப்படுத்தியவர்களைக் கைது செய்வதாக காவல்துறை சொல்லி இருக்கிறது. இல்லைன்னா, எங்க போராட்டம் தொடரும்" என்றார் காட்டமாக!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!