திருச்செந்தூர் கோயிலில் பலத்த காற்றால் உடைந்து நொறுங்கிய உயர் மின்விளக்குகள்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  வீசிய  பயங்கரக் காற்றால், நாழிக்கிணறு அருகில் உள்ள ராட்சத உயர் மின்கோபுரத்திலிருந்து மின்விளக்குகள் கீழே விழுந்து நொறுங்கின.  அப்பகுதியில் பக்தர்களின் நடமாட்டம் இல்லாததால் விபத்து ஏதும் ஏற்படவில்லை.

”ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்” என்று ஒரு  பழமொழி உண்டு. நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்,  ஆடி மாதம் பிறப்பதற்கு முன்பே பருவக் காற்று வீசத் துவங்கி உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று காலை முதலே காற்று பலமாக  வீசியது. காற்றினால் சாலைகளில் புழுதி வாரி வீசப்பட்டது. இதனால், சாலைகளில் இருசக்கரம் மற்றும் நான்கு வாகனங்களில் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். திருக்கோயில் கடற்கரைப் பகுதியிலும் மண் புழுதி வாரி இரைத்தது. 

இப்பலத்த காற்றினால், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள நாழிகிணறு அருகிலுள்ள ராட்சத உயர்மின் கோபுர விளக்குகள் கீழே விழுந்தன. கடந்த, 15 ஆண்டுகளாக இதே இடத்தில் உள்ள  இக்கோபுர மின்விளக்கில், 16 லைட்டுகள், கீழ் பகுதியில் 8 பெரிய பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. மாலை முதல் காலை வரையில் தலா, 400 வாட்ஸ் பவர் கொண்ட, 24 மின் விளக்குகளும் எரியும். பலமாக வீசிய சூறைக் காற்றில், மின் கோபுரத்தில் உள்ள ஸ்டீல் கயிறு அறுந்தது. இதனால்  மின் கம்பத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் கீழே விழுந்தன.

அந்த நேரத்தில், அப்பகுதியில் பக்தர்களின் நடமாட்டம் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக  விபத்துகள் ஏதும் நடக்கவில்லை. கீழே விழுந்து நொறுங்கிய மின் விளக்குகளின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இதுகுறித்து தகவலறிந்ததும் கோயில் மின் ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்தினர். கடந்த ஜூன் 20ம் தேதி, அன்னதான  மண்டபத்திற்கு எதிர் பகுதியில் உள்ள பழமையான வேப்பமரத்தின் பெரிய கிளை காற்றில் முறிந்து விழுந்தது. இதில், 4 துப்புரவுப் பெண் பணியாளர்கள் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருக்கோயில் வளாகத்தில் உள்ள கலையரங்கம் அருகில் உள்ள பழமையான புங்கை மரம் வேரோடு காற்றில் சாய்ந்தது. அப்பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாததாலும், வாகனங்கள் ஏதும் நிறுத்தப்படாததாலும் விபத்துகள் நடக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!