நிஜத்தில் ஒரு கடைக்குட்டி சிங்கம்! விவசாயி ரவி | The real 'kadaikkutti singam' Farmer Ravi!

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (15/07/2018)

கடைசி தொடர்பு:02:00 (15/07/2018)

நிஜத்தில் ஒரு கடைக்குட்டி சிங்கம்! விவசாயி ரவி

 

கரூர் மாவட்டத்தில் உண்மையில்   ‘கடைக்குட்டி சிங்கம்’ கார்த்திக் கேரக்டரில் வாழ்ந்து வருகிறார் ரவி என்ற இயற்கை விவசாயி.

விவசாயி

கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்கிற்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். இயக்குநர் பாண்டியராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்தில் நடித்த கார்த்திக் ஓட்டும் வண்டியில் விவசாயி என்று எழுதி இருப்பார்;காளைகளை நேசிப்பார்;விவசாயத்தை பற்றி எங்கும் பேசுவார்;நம்மாழ்வாரை வெளிப்படுத்துவார்;வீட்டிற்கு வருபவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்குவார்..இப்படி இவசாயத்தை படம் நெடுகிலும் தனது குணசிங்கம் என்ற கேரக்டர் மூலம் தூக்கி பிடித்திருப்பார். ஆனால்,கரூர் மாவட்டத்தில் உண்மையில் அப்படி கடைக்குட்டி சிங்கம் கார்த்திக் கேரக்டரில் வாழ்ந்துவருகிறார் ரவி என்ற இயற்கை விவசாயி.
 

கரூர் மாவட்டம்,தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள குள்ளமாபட்டியைச் சேர்ந்தவர் ரவி. தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டையில் தொழில் செய்து வரும் இவர்,தனது ஊரில் 20 ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தனது விவசாய தோட்டத்தின் கேட் பகுதியில் ஒருபுறம் நம்மாழ்வார் ஓவியத்தையும்,மறுபுறம் பாரதியார் ஓவியத்தையும் வரைந்து வைத்திருக்கிறார். தனது காரில்,'ஏரோட்டி' என்று எழுதி வைத்திருக்கிறார். அதேபோல்,தனது தோட்டத்திற்கு வருபவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்குகிறார். அதோடு,ஐந்துக்கும் மேற்பட்ட காங்கேயம் காளைகள் மற்றும் பசுக்களை வாங்கி,அவற்றை பிள்ளைகள் போல வளர்க்கிறார். தோட்டத்திற்கு வருபவர்கள் பருக கம்மங்கூழையும்,கேப்பைக்கூழையும் மண்பாத்திரத்தில் தருகிறார். கிட்டத்தட்ட கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த கார்த்திக்கின் குணசிங்கம் கேரக்டரை அப்படியே அப்பட்டமாக பிரதிபலிக்கும் நபராக இருக்கிறார் ரவி. அவரைச் சந்தித்தோம்.
 

"எங்களுக்கு பூர்வீக நிலம்ன்னு ஒன்றரை ஏக்கர் இருக்கு. அதுல எங்கப்பா விவசாயம் பார்த்தார். எனக்கு விவசாயத்துல ஆரம்பத்துல ஆர்வம் இல்லை. நாலு வருஷத்துக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா கருத்துகளை கேட்டதும்,விவசாயம் மேல பெரிய ஈடுபாடு வந்தது. அதனால்,இருபது ஏக்கர் நிலத்தை எங்க ஊர்ல வாங்கிட்டேன். இயற்கை விவசாயம் செய்துட்டு வர்றேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி விவசாய குடும்பம்ன்னு சொல்லிக்கவே வெட்கப்படுவேன். நம்மாழ்வார் அய்யா பாதிப்புக்கு பிறகு,அது எவ்வளவு முட்டாள்தனம்ன்னு புரிஞ்சுச்சு. அன்றில் இருந்து என்னோட எல்லா அசைவுகளிலும் விவசாயி என்பதை பிறருக்கு உணர்த்துறேன். கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக் கேரக்டர் கிட்டத்தட்ட என்னைமாதிரியே இருக்குன்னு நண்பர்கள் சொன்னாங்க. நான் இன்னும் படம் பார்க்கலை. விவசாயத்தையும்,விவசாயிகளையும் உயர்த்திப் பிடித்திருக்கும் இயக்குநர் பாண்டியராஜூக்கும்,நடிகர் கார்த்திக்கும் எனது வாழ்த்துகள்" என்றார்.