வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (15/07/2018)

கடைசி தொடர்பு:04:30 (15/07/2018)

மாவட்டச் செயலாளர் மாற்றம்..! சு.ப.தங்கவேலனை சமாதானம் செய்த ஐ.பெரியசாமி

 மகனின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்ததால் தி.மு.க தலைமை மீது அதிருப்தியில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனை திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி நேரில் சந்தித்து சமாதானம் செய்து விட்டு சென்றார்.

மகனின் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்ததால் தி.மு.க தலைமை மீது அதிருப்தியில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனை தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி நேரில் சந்தித்து சமாதானம் செய்து விட்டு சென்றார்.
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயலாளராக 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தவர் முன்னாள் அமைச்சர் சு.ப.தங்கவேலன். இதனைத் தொடர்ந்து அவரது மகன் சுப.த.திவாகரன் மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். தி.மு.க தலைமை பல ஆண்டுகளாக கட்சியில் பொறுப்பில் இருப்பவர்களை நீக்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் தங்கவேலன் மற்றும் திவாகரன் மீது கட்சியினர் புகார் மனு அளித்தனர்.

தி.மு.க முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன்

புகார் பெட்டியில் வரப்பெற்ற புகார்கள் அடிப்படையிலும், கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திலும் எடுத்த முடிவின்படி தொடர்ந்து தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்து வந்த திவாகரன் மாற்றம் செய்யப்பட்டு புதிய மாவட்டப் பொறுப்பாளராக கமுதி ஒன்றியச் செயலாளராக இருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ.காதர்பாட்ஷா மகன் க.முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டார். இதனால் சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தனர். மேலும் அழகிரிக்கு எதிராக இருந்து வந்த தங்கவேலன் சமீபத்தில் மதுரைக்குச் சென்று அழகிரியை சந்தித்துள்ளார். இத்தகவல் கட்சித் தலைமைக்கு தெரியவந்ததையடுத்து கட்சியின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி ராமநாதபுரம் வருகை தந்தார்.

தி.மு.க முன்னாள்  அமைச்சர் ஐ.பெரியசாமி

ராமநாதபுரத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் சுப.தங்கவேலனின் ஆதரவாளர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மாவட்டச் செயலாளர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளார். அவர் திரும்பி வந்த பிறகு பேசிக்கொள்ளலாம். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்குமாறு அவர்களை ஐ.பெரியசாமி சமாதானப்படுத்தியுள்ளார். பின்னர் ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள முன்னாள் மாவட்டச் செயலாளரான சுப.த.திவாகரனின் வீட்டிற்கு சென்று, முன்னாள் அமைச்சருமான சுப.தங்கவேலனை நேரில் சந்தித்து சமாதானம் பேசி விட்டு சென்றார்.  ஐ.பெரியசாமியுடன் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர் கா.முத்துராமலிங்கம் உள்ளிட்டோரும் உடன் இருந்துள்ளனர்.