மேகமலையில் தொடரும் விபத்துகள்..! தேனி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நியூட்ரலில் வாகனத்தை இயக்குவதே மேகமலை விபத்திற்கு காரணம்.! – தேனி கலெக்டர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலைக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகள், மேகமலை மலைச் சாலையில் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மேகமலைச் சாலைக்குச் சென்று வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்தார்.

தென்பழனி முதல் ஹைவேஸ் வரையிலான 32 கிலோமீட்டர் மலைச் சாலை சீரமைக்கும் பணியானது ஆமை வேகத்தில் நடைபெறுவதும், சாலையோர அபாய எச்சரிக்கை பலகைகளை வைக்காததுமே தொடர் விபத்துகளுக்கு காரணமாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், மேகமலைச் சாலைக்கு சென்ற கலெக்டர் வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செய்தார். அதன் பின்னர் நம்மிடம் பேசியவர், ‘’சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்குவது, மலைச் சாலையில் அதி வேகத்தில் வாகனத்தை இயக்குவது போன்ற காரணங்களால் விபத்து ஏற்படுகிறது. மேலும், மலைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் போது, வேகமாக கீழிறங்க வேண்டும் என்பதற்காக வாகனத்தை நியூட்ரலில் இயக்குகிறார்கள். இதனால் தான் சமீப கால விபத்துகள் நடந்திருக்கின்றன. இது தொடர்பாகவும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

அதே நேரம், சாலை ஓர எச்சரிக்கை பலகைகள் அதிகமான இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. வளைவுகளில் அலுமினியத்தால் ஆன சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இனி மேகமலைச் சாலையில் விபத்துகளை குறையும் என நம்பலாம்’’ என்றார். ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வு என்று இல்லாமல், தென்பழனியில் உள்ள வனத்துறையின் சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தினமும் செய்திட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்பாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!