”உபரி நீர் வீணாகாமல் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கர்நாடகத்திலிருந்து வரும் உபரி நீர் வீணாகாமல் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் தற்போது நல்ல மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் பாய்கிறது. கர்நாடகாவில் காவிரி ஆற்றின்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக அணைகள் நிரம்பி விட்டதால் தற்போது அதிக அளவில் உபரி நீர் தமிழகத்துக்குத்  திறந்து விடப்படுகிறது. இதனால் ஒக்கேனக்கல் பகுதியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. 

கபினி அணை

இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கர்நாடகம்  ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. தண்ணீரும் ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. ஆகஸ்டில் 45.95 டி.எம்.சி. செப்டம்பரில் 36.76 டி.எம்.சி, அக்டோபரில் 20.22 டி.எம்.சி, நவம்பரில் 13.78 டி.எம்.சி., டிசம்பரில் 7.35 டி.எம்.சி., ஜனவரியில் 2.76 டி.எம்.சி., பிப்ரவரி முதல் மே வரை 2.50 டி.எம்.சி தண்ணீர் என மொத்தம் 177.25 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டும் எனக்  காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தற்போது கர்நாடகத்தில் கனமழை பெய்து அதன் காரணமாக அங்கு இருக்கக்கூடிய அணைகளில் தண்ணீரை தேக்க முடியாமல் உபரி நீரைத்  தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாஇந்த அளவிற்கு அதிக அளவில் தண்ணீரைத் திறந்துவிட்டு தமிழகத்திற்குத்  தேவைப்படக்கூடிய காலகட்டத்தில் மொத்தமாகக் கணக்கு காட்டுவது கர்நாடகத்தின் வழக்கமாக இருக்கிறது. மாதந்தோறும் எந்த அளவிற்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறதோ அந்த அளவிற்கு தண்ணீரைத் திறந்துவிடாமல் அதிகமாகத்  தண்ணீரை திறந்துவிடுவது கர்நாடகத்தில் உள்ள அணைகளைப் பாதுகாக்க வேண்டித்தான்  என்று வல்லுநர்கள்  கூறுகிறார்கள். தமிழகத்திற்குத்  தண்ணீர் தேவைப்படக்கூடிய காலகட்டத்தில்  தண்ணீரைத்  திறக்காமல் உபரி நீரை மட்டும் திறந்து விடுவது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது. 

மேட்டூர் அணை 93.47 டி.எம்.சி அளவிற்கு மட்டுமே தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். அதற்குக்  கீழ் உள்ள சிறிய அணைகள் எல்லாம் அதிகமான அளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழல் உள்ளது. காவிரியில் ஒரு காலகட்டத்தில்  தண்ணீர் இல்லாத சூழலும், உபரியாக வரும் போது அதனைத் தேக்கி வைக்க வசதி இல்லாத சூழலும் நிலவுகிறது. 

எனவே, இந்த உபரி நீரைத்  சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளைத்  தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும் எனவும், மேட்டூரில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் காவிரி பாசனப் பகுதிகளுக்கு இம்மாத இறுதிக்குள் மேட்டூர் அணையிலிருந்து நீரைத் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதேபோல் மேட்டூரிலிருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை உள்ள பாசனப் பகுதிகளுக்கு செல்லும் வகையில் பாசன வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் கால்வாயில் மண்டிக்கிடக்கும் புதர்களையும் அகற்றப்  போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணியை பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ள வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” எனக்  தமிழக அரசுக்குக்  கோரிக்கை விடுத்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!