"44 ஏக்கர் கனிராவுத்தர் குளம் 14 ஏக்கர் ஆன கதை!” - ஈரோட்டில் பகல் கொள்ளை

25 வருடத்திற்கு முன் வரையிலும் அதைச்சுற்றியுள்ள ஊர்களின் நிலத்தடி நீராதாரத்திற்கும், நேரடி குடிநீர் பயன்பாட்டிற்கும், மீன் பிடிப்பதற்கும் என்று பல வகைகளில் மக்களின்

இயற்கை மனிதனின் வாழ்வைச் செழுமையாக்குகிறது. இயற்கை மண்ணின் தரத்தை அதன் ஈரத்தைச் சிறப்புற்றிருக்கச் செய்கிறது. அதன் செயற்பாடுகளுக்கு இன்றியமையா உறுதுணை புரிவது நீர். அதைப் பல வழிகளில் கட்டுபடுத்திப் பயன்படுத்துவதில் தமிழகம் முதன்மையானதொரு இடத்தைப் பலகாலமாக வரலாற்றில் பிடித்திருக்கிறது. அத்தகைய வழிகளில் ஒன்று தான் குளங்கள். குளம், நீரை ஒரே இடத்தில் தேக்கி வைப்பதன் மூலம் அது அமைக்கப்படும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்வளத்தை அதிகரிப்பதற்கும், குடிநீர்ப் பற்றாக்குறை, விவசாயப் பயன்பாடுகள் போன்றவற்றிற்கு உறுதுணை புரியவும் அமைக்கப்படும் ஒரு நீர்த்தேக்கம். அந்த வகையில் ஈரோட்டில் அக்ரஹாரம் மற்றும் பெரிய சேமூர், வீரப்பன்சத்திரம் போன்ற நகராட்சிப் பகுதிகளின் நீர்த்தேவைகளுக்குப் பேருதவி புரிந்துகொண்டிருந்தது தான் கனிராவுத்தர் குளம்.

கனிராவுத்தர் குளம்

குளத்தின் மீதே கட்டப்பட்டிருக்கும் கட்டடம்

25 வருடத்திற்கு முன் வரையிலும் அதைச்சுற்றியுள்ள ஊர்களின் நிலத்தடி நீராதாரத்திற்கும், நேரடி குடிநீர் பயன்பாட்டிற்கும், மீன் பிடிப்பதற்கும் என்று பல வகைகளில் மக்களின் வாழ்வாதாரத்தில் பங்கு வகித்தது. 2007ஆம் ஆண்டு வரையிலுமே அங்கு மீன் பிடிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஏலம் விடப்பட்டுக் கொண்டுதானிருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியில் எடுக்கப்பட்ட நில அளவைப் பதிவுகளின் படி 44ஏக்கர் பரப்பளவு இருந்த குளத்தின் தற்போதைய பரப்பு வெறும் 14ஏக்கர் தான். அதன் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களால் சூழப்பட்டுவிட்டது. தமிழ்நாடு மாநகராட்சிக் கட்டுமானச் சட்ட விதிகளின் படி மயானத்தில் இருந்து 90 மீட்டர் வரையிலும், நீர்நிலைகளில் இருந்து 15 மீட்டர் வரையிலும் கட்டடங்கள் அமைக்கக்கூடாது. ஆனால், கனிராவுத்தர் குளத்தை ஒட்டியே கட்டடங்களும், குடியிருப்புகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. குளக்கரையே இல்லாத ஒரு குளமாகத் தற்போது அது இருப்பதற்குக் காரணம், குளத்திற்குள்ளேயே கட்டப்பட்டிருக்கும் கட்டடங்கள்தான்.

நசியனூர் சிந்தன் குட்டை, கமலம் குளம், புது வலசு குளம், கருவில்பாறை வலசு குளம் போன்ற சிறு நீர்நிலைகளிலிருந்து சிற்றோடைகள் வழியாக வரும் நீர் கனிராவுத்தர் குளத்தில் கலக்கின்றன. அந்த நீர்வழித்தடங்கள் அடைக்கப்பட்டு குளத்தில் நீர் தேங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த மதகுகள் உடைக்கப்பட்டதால் குளத்தில் நீர் தேங்குவது இயலாமல் போனது. தற்போது குளத்தின் பெரும்பாலான இடங்கள் மனைகளாக விற்கப்பட்டுவிட்டன. குளப்பகுதிகளில் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த பி.கே.துரைசாமி என்பவர் மீது தொடரப்பட்ட வழக்கில் குளத்துப் பகுதிக்குள் இருக்கும் கட்டடங்களை 90 நாட்களில் மூடவும், அவற்றை அப்புறப்படுத்தவும் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் கனிராவுத்தர் குளமென்பது தீர்ப்பில் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பி.கே.டி நகர் அச்சுப்பிழையால் டி.கே.டி நகரென்று தவறாகப் பதிவாகிவிட்டது. ஆனால், குளத்தைச் சுற்றி 15 மீட்டருக்கு அனைத்து கட்டடிங்களையும் அப்புறப்படுத்துமாறு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் இன்னும் அந்தக் கட்டிடங்கள் அப்புறப்படுத்தபடவோ, குளத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்படவோ இல்லை. அத்தோடு குளத்தை ஒட்டியே இருக்கும் அவர்களுக்குச் சொந்தமான வணிக வளாகமும் தங்குதடையின்றி செயல்பட்டுக்கொண்டுதானிருக்கிறது.

வாய்க்கால்

30 அடி அகலமிருந்த நீர்வழித்தடம் தற்போது சாக்கடைக் கால்வாயாக...

அதுமட்டுமின்றி தற்போது அந்தப் பகுதிகளின் சாக்கடைக் கால்வாய்களின் தடங்களும் கனிராவுத்தர் குளத்தை நோக்கியே திருப்பப் பட்டிருப்பதால் அனைத்து கழிவுகளும் அதில் தான் சேருகின்றன. குளத்தைச் சுற்றியுள்ள கட்டிடங்களின் கழிவுநீர்த் தொட்டிகளிலிருந்தும் கழிவுகள் இந்தக் குளத்தில் சேருகின்றன. குளத்தின் மேற்குப் பகுதி குடியிருப்புவாசிகளின் மயானமாகவும், வடக்குப் பகுதி கருப்பண்ணன் குட்டை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து குளத்திற்கு வரும் நீர்வழி வாய்க்கால் தடமாகவும் இருந்துள்ளது. தற்போது அது பி.கே.டி நகராக மாற்றப்பட்டுவிட்டது. 1995ஆம் ஆண்டு ரோஜா நகர் மனைப்பிரிவிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட சுற்றுச்சார்பு வரைபடச் சான்றிதழில் பி.கே.டி நகர் பகுதிகள் குளம் என்று பதிவாகியுள்ளது. சுமார் 30அடி அகலமிருந்த நீர்வழித்தடங்களை அடைத்துச் சிற்றோடையாக்கிவிட்டார்கள். அவையும் தற்போது சாக்கடைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டமன்ற மானிய கூட்டத்தொடரில் கனிராவுத்தர் குளம் 36ஏக்கர் பரப்பளவிற்குத் தூர்வாரி புணரமைக்கப்படுவதற்கு அப்போதைய தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி 10கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு.என்.டி.வெங்கடாச்சலம் அறிவித்தார். ஆனால் இன்றுவரை எந்தப் பணியும் மாநகராட்சி சார்பில் நடத்தப்படவில்லை. இந்தப் பிரச்னையில் எந்த முடிவும் எட்டப்படாத காரணத்தால் அப்பகுதியைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்களே நிதி திரட்டி பொதுமக்களோடு இணைந்து கடந்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி குளத்தைத் தூர்வாரி ஆக்கிரமிக்கப்படாமல் மீதமிருந்த 14 ஏக்கர் பரப்பை மீட்டெடுத்தனர். அதுதொடர்பாக கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. நிலவன் அவர்களைத் தொடர்பு கொண்டோம்.

"கடந்த நான்கு ஆண்டுகளாக கனிராவுத்தர் குளம் ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்களை ஒன்றிணைத்துப் போராடி வருகிறோம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதில் தொடங்கி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது வரை பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டோம். 2015ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும். 2016 சட்டசபையில் அன்றைய முதல்வர் அவர்கள் ஒதுக்கிய 10கோடி நிதியும் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆதலால், மக்களோடு இணைந்து தூர்வாரும் பணியைத் தொடங்கினோம். சமூக ஆர்வலர் மேதா பட்கர் அவர்கள் வந்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்." 

இது தொடர்பாக ஈரோடு மாநகராட்சிக் கமிஷனரைச் சந்தித்துப் பேசினோம்.

உயர்நீதிமன்ற தீர்ப்பு நகல்

"ஒரு கட்டிடம் ஆக்கிரமிப்புக் கட்டிடம் என்பதை சொல்லவேண்டியது வருவாய்த் துறைதான். அப்படி யாரும் சொல்லவில்லை. ஒருவருக்குச் சொந்தமான கட்டிடத்தை அகற்றுவதற்கு மாவட்ட வருவாய் அலுவலருக்கு எந்த அதிகாரமுமில்லை. அந்தக் கட்டிடம் குளத்தை ஒட்டியே கட்டும் விதத்தில் அவர்களுக்கு லே-அவுட் போட்டுக் கொடுத்தது 2005-ல் அதைப் போட்டுக் கொடுத்த அதிகாரி. தவறு அவருடையது. தவறு செய்தவர்களேதான் சரிசெய்யவேண்டும். அதுமட்டுமின்றி குளத்தை ஒட்டியுள்ள கட்டிடத்தை இடிக்குமாறு நீதிமன்றம் எந்த விதமான தீர்ப்பையும் வழங்கவில்லை."

கனிராவுத்தர் குளத்தை ஒட்டிய 15 மீட்டர் இடைவெளியில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களை அகற்றுமாறு உயரிநீதி மன்றத்தில் 2015ஆம் ஆண்டில் வெளிவந்த தீர்ப்பின் ஷரத்தை மேலே புகைப்படமாக்கிப் பதிவிட்டுள்ளோம். ஆனால், தீர்ப்பே வரவில்லையென்று மாநகராட்சி கமிஷனர் கூறுவது ஏனென்பது புரியவில்லை. அதே சமயம் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குளத்திலிருந்து 15 மீட்டர் அளவிற்குள் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். இவையனைத்தும் இருந்தும்கூட மாநகராட்சிக் கமிஷனர் அது தனிப்பட்ட ஒருவரின் சொந்தக் கட்டிடமென்றும் அதை இடிக்கமுடியாதென்று கூறுகிறார். தனிப்பட்ட ஒருவராக இருந்தாலும் சட்டவிதிகளின்படி கட்டிடங்களை அமைக்கவேண்டும். அப்படிக் கட்டப்படாமல் அது ஆபத்திற்குள்ளாக்கும் வகையிலிருந்தும் கூட அதன்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருக்கிறது ஈரோடு மாநகராட்சி.

மக்களின் முயற்சியில் முதல் வெற்றியாக குளத்தின் மீதமிருந்த பகுதி தூர்வாரப்பட்டபின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய பருவமழையின்போது குளத்தில் நீர் தேங்கத்தொடங்கியது. அதனால் குளத்திற்குள் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களில் நீர்புகுந்தது. குளத்தின்மீது இருக்கும் கட்டுமானங்களை அகற்றவேண்டிய நகராட்சி நிர்வாகம் வேலையாட்களை அனுப்பி மக்களால் தூர்வாரப்படும்போது நீர் தேங்குவதற்காக அமைக்கப்பட்ட மதகினை உடைத்து குளத்து நீரை வெளியேற்ற முயன்றது. அச்சமயத்தில் ஒன்றுகூடிய மக்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக அதன் செயல்களைக் கண்டித்து சூழலியல் ஆர்வலர்கள் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இன்றுவரை ஆக்கிரமிப்புப் பகுதியான பி.கே.டி நகரும், குளத்து நீர்வழித்தடத்தின் மீதிருக்கும் அவர்களுக்குச் சொந்தமான வணிக வளாகமும் அகற்றப்படாதது மட்டுமின்றி இன்னமும் செயல்பட்டுக்கொண்டுதானிருக்கின்றது.

வடிவேலு சொல்வதைப் போலநிஜமாகவே தமிழகத்தில் பல குளங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. குளத்தைத் திருடுபவர்கள் பனைமரத்துக்கு பதில் கட்டிடங்களை நட்டு வைத்துவிடுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!