‘ என் பிள்ளை போல் நினைத்து படிக்க வைப்பேன்’ - சிறுவன் யாசினை நெகிழவைத்த ரஜினி

யாசின் எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டுமென ஆசைப்பட்டாலும், அவனை என் பிள்ளைபோல் நினைத்து நான் படிக்க வைப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி

ஈரோடு கனிராவுத்தர்குளம், சி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பாட்சா - அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசின். சேமூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் முகமது யாசின், கடந்த 11-ம் தேதி காலை பள்ளி இடைவேளையின்போது தனது நண்பர்கள் சிலருடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறான். அப்போது பள்ளியை ஒட்டிச் செல்லும் சாலையில் 50,000 ரூபாய் கேட்பாரற்றுக் கிடந்திருக்கிறது. இதைப் பார்த்த சிறுவன் யாசின், அந்தப் பணத்தை அவனுடைய வகுப்பாசிரியரிடம் கொண்டு போய் கொடுத்திருக்கிறான். சிறுவனின் இந்த நேர்மையைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப்போன ஆசிரியர்கள், யாசினை நேரடியாக ஈரோடு எஸ்.பி.யிடமே அழைத்துச் சென்று அந்தப் பணத்தை ஒப்படைத்திருக்கிறார்கள்.இந்தச் சிறுவனின் செயலை பொதுமக்களும் பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் யாசினின் வீட்டுக்குச் சென்ற ரஜினி மன்ற நிர்வாகிகள் சிறுவனையும், அவனின் பெற்றோர்களையும் கௌரவித்துள்ளனர்.

அப்போது சிறுவனிடம் உனக்கு என்ன உதவி வேண்டும் எனக் கேட்டதுக்கு,  ‘ எனக்கு உதவி எதுவும் வேண்டாம் ரஜினி அங்கிளை நேரில் பார்க்க வேண்டும். அதுவே என் ஆசை’ எனக் கூறியுள்ளான்.சிறுவனின் ஆசையை ரஜினியிடம் தெரிவித்த போது அவர் உடனடியாக யாசினை காண ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து இன்று காலை சென்னை வந்த சிறுவன் மற்றும் அவரது பெற்றோர்களை, ரஜினி தனது வீட்டுக்கு வரவழைத்து நேரில் சந்தித்துள்ளார். மேலும் அந்தச் சிறுவனின் செயலைப் பாராட்டி அவனுக்கு ஒரு தங்க சங்கிலியையும் பரிசாக வழங்கியுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “பணத்துக்காகக் கொலை, கொள்ளை எனப் பல விசயங்கள் நடக்கும் இந்தக் காலகட்டத்தில், யாசின் தனக்கு கிடைத்த பணத்தை எண்ணுடையது இல்லை எனப் திருப்பி தந்துள்ளான். இந்தக் குணம், இந்த மனம் இதை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இவனைப் பெற்றவர்கள் இவ்வளவு பண்பானவனாக வளர்த்தவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். தற்போது சிறுவன் அரசுப்  பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார். அவன் அங்கேயே படிக்கட்டும் என நான் பெற்றோர்களிடம் கூறியுள்ளேன். யாசின் எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டுமென ஆசைப்பட்டாலும், அவனை என் பிள்ளைபோல் நினைத்து நான் படிக்க வைப்பேன். இவர்களைப் போன்ற குழந்தைகள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்  . காமராஜரின் பிறந்த நாளான இன்று யாசினை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி” எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!