‘பசுமைவழிச் சாலை போன்ற திட்டங்களால் தான் நாடு முன்னேறும்’ - ரஜினி ஓபன் டாக்

‘பசுமைவழிச் சாலை போன்ற பெரிய திட்டங்களால் தான் நாடு முன்னேறும். அதனால் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்’ என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி

கீழே கிடந்த ரூ.50,000 பணத்தை போலீஸிடம் ஒப்படைத்த ஈரோட்டை சேர்ந்த சிறுவன் யாசினை நடிகர் ரஜினிகந்த் நேரில் வரவழைத்துப் பாராட்டினார். அந்தச் சிறுவனின் கல்வி செலவை தானே ஏற்பதாகக் கூறி சிறுவனுக்கு  ஒரு தங்க சங்கிலியையும் பரிசாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்,  “சிறுவன் யாசின்  பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். தன்னிடம் கிடைத்த பணத்தைத் திருப்பி கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளான். அவனிடம் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டபோது, ரஜினியை பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இப்படி ஒரு ரசிகன் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாசின்  என்ன படிக்க வேண்டும் என நினைத்தாலும் அதன் செலவுகளை  நானே ஏற்கிறேன் எனக் கூறியுள்ளேன். காமராஜர் போன்ற தலைசிறந்த அரசியல்வாதி யாரும் இருக்கமுடியாது. அவர் மக்களுக்காகப் பெரிதும் உழைத்துள்ளார். அவரை போன்ற நல்ல தலைவர்கள் மீண்டும்  தமிழகத்தில் தோன்றி ஆட்சி செய்ய வேண்டும் என்பது மக்களின் ஆசை இதுவே என்னுடைய ஆசையும் கூட. கல்வியில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின்  வளர்ச்சி அதிகமாகவே உள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் தன் வேலைகளைச் சிறப்பாக செய்து வருகிறார். தமிழருவிமணியன் என் கட்சியில் இணையப் போகிறார் என்பதை நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன். அவர் காந்திய வழியில் வாழ்ந்து வந்தவர் அப்படிப் பட்ட ஒருவர் என்னுடன் இணைய விரும்புவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு என் நன்றிகள்.  

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் யோசிக்கவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அது குறித்து ஆலோசிக்கப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் நல்ல யோசனை. நேரம், பணம் ஆகியவற்றைச் சேமிக்கலாம். அரசியல்வாதிகளின் நேரம் அனைத்தும் தேர்தல்களை சந்திப்பதிலேயே முடிந்துவிடுகிறது  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் இவற்றைத் தவிர்க்கலாம்.  லோக் ஆயுக்தா வரவேற்கத்தக்கது. ஆனால் அதைச் சக்தி வாய்ந்த சட்டமாகச் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசு  இன்னும் நல்லப் படியாக செயல்பட்டால் இன்னும் நல்லது.

பசுமைவழிச் சாலை போன்ற பெரிய திட்டம் வந்தால் தான் நாடு முன்னேறும். இந்தத் திட்டங்களின் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பெரிய திட்டங்களின் மூலம் சில இழப்புகள் வரத் தான் செய்யும்,  பாதிக்கப்பட்டவர்கள்  மகிழ்ச்சியடையும் வகையில் அவர்களுக்கு நிலம், பணம் ஆகியவற்றை அளித்து முழுமையாக சமரசப்படுத்த வேண்டும். முடிந்தவரையில் விவசாய நிலங்களைத் தவிர்த்து  அவை பாதிக்காத வகையில்  திட்டம் செயல்படுத்துவது இன்னும் மகிழ்ச்சி. என் மன்றத்தில் ஒரு கோடி உறுப்பினர்கள் இணைந்துள்ளனர் எனக் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல்” எனக் கூறினார். தொடர்ந்து முழுமையான அரசியல்வாதியாக எப்போது வருவீர்கள்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அதற்குக் காலம் தான் பதில் சொல்லும் எனப் பதிலளித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!