காமராஜர் சிலையை சுற்றி பா.ஜ.க. கொடி..! -சேலத்தில் காங்கிரஸ் பா.ஜ.க.,வினர் இடையே மோதல்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவருமான காமராசரின் 116 வது பிறந்த நாள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சேலம் பழைய பேருந்து நிலையம் கமலா மருத்துவமனை அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை போட காங்கிரஸ் கட்சியினரும், பா.ஜ.க.,வினரும் வந்திருந்தார்கள். காமராஜர் சிலையை சுற்றி பா.ஜ.க., கொடிகள் கட்டப்பட்டிருந்தது.

அதை காங்கிரஸார் அவிழ்க்கும் போது பா.ஜ.க.,வினருக்கும், காங்கிரஸாருக்கும் இடையே கைகலப்பு, அடிதடி, கல் வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெற்றது. அதையடுத்து இரு தரப்பினரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், ''எங்க கட்சியின் அகில இந்திய தலைவராக திகழ்ந்த காமராஜரின் 116 -வது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் கமலா மருத்துவமனை அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை போட வந்தோம்.  பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வருவதாகவும், அவர் மாலை போட்ட பிறகு எங்களை மாலை போட காவல்துறையினர் சொன்னதையடுத்து ஒதுங்கி நின்றோம்.

ஆனால் காமராஜர் பாரதிய ஜனதா கட்சி தலைவரைப் போல சிலையைச் சுற்றி கட்சிக் கொடிகளும், தோரணங்களும் கட்டி இருந்தார்கள். காமராஜர் சிலைக்கு எல்லாக் கட்சியினரும் மாலை போட்டு மரியாதை செலுத்த உரிமை உண்டு. இப்படி சிலையை மறைத்து கட்சி கொடி கட்டக் கூடாது. அதனால் கட்சி கொடியை அவிழ்க்க சொல்லிக் கொண்டிருந்தோம். அவர்கள் எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குள் அமைச்சரும் வந்து மாலை போட்டு கீழே இறங்கி விட்டார். அதன் பிறகு எங்கள் ஆட்கள் பா.ஜ.க., கொடியை அவிழ்க்க முற்பட்டார்கள். உடனே பா.ஜ.க.,வினர் காட்டு மிராண்டிகளைப் போல அராஜகத்தில் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டார்கள். இதில் காயமடைந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பச்சப்பட்டி பழனிசாமி, பூபதி ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறோம். பா.ஜ.க.,வின் வன்முறைக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

இதுபற்றி பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ், ''எங்கள் கண்முன்னே கட்சியைக் கொடியை கசக்கிப் போட்டால் யாருக்குத் தான் கோபம் வராது. அதைத் தட்டி கேட்டதற்கு அடிக்கப் பாய்ந்தார்கள். கைகலப்பு நேர்ந்தது. கற்களால் அவர்களும் அடித்தார்கள் எங்கள் ஆட்களும் அடித்தார்கள். எங்கள் மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் கடுமையான காயம் ஏற்பட்டு கமலா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்'' என்றார்.

இதுபற்றி பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இது அநாகரிகமான செயல் என்று கூறி விட்டுச் சென்றார்.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!