வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (15/07/2018)

கடைசி தொடர்பு:16:31 (16/07/2018)

"நான் மூட்டை தூக்கி வந்தேனா?" தினகரனை கோயிலுக்குக் கூப்பிடும் எஸ்.பி.வேலுமணி

வேலுமணி

"கோவையில் டி.டி.வி தினகரன் நடத்திய பொதுக்கூட்டத்தில் பொய்யான தகவல்களை சொல்லி தன்னை தரம்தாழ்ந்து விமர்சித்திருப்பதாகவும், அவர் விமர்சித்தது உண்மையெனில் அதை கோயிலில் வந்து சொல்லட்டும்" என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 113 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  "கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை துவக்கி வைத்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். எதிர்க்கட்சிகள்  எத்தனை இடையூறுகள்  செய்தாலும் 24 மணி நேர குடிநீர் திட்டம் கோவைக்கு கொண்டுவரப்படும். அம்மா அரசு எதற்கும் பின் வாங்காது. கோவையில் நடத்திய பொதுக்கூட்டத்தில் டி.டி.வி தினகரன் என்னைப் பற்றி விமர்சித்திருப்பதை நேற்றுதான் நண்பர்கள் காண்பித்தார்கள். பொதுக்கூட்டத்திற்கு எப்படி அவ்வளவு கூட்டம் வந்தது என ஏற்கனவே சொல்லிவிட்டேன். அவர் எந்த மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தினாலும் வருவது ஒரே ஆட்கள்தான். அஸ்ஸாமிலிருந்தும், குஜராத்திலிருந்தும் இங்கு வேலைக்கு வந்திருப்பவர்களை வேன் வைத்து அழைத்து வந்துவிடுகிறார்கள். 

ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் நான் பணியாற்றியது உண்மைதான். நான் பணியாற்றியது வடுகப்பட்டி பகுதியில் அமைச்சர் சண்முகவேல் தலைமையில்தான். நான் அங்கு வேலைப்பார்த்தேனே ஒழிய தினகரன் சொல்வதைப்போல அவர் வீட்டுக்கு பேனர்களை சாக்கு மூட்டையில் கட்டித்  தூக்கிச் செல்லவில்லை. பொய்யான தகவல்களை வைத்து ஆதாரமில்லாமல் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். தினகரனால் நான் கட்சிக்குள் வரவில்லை. 1972-ல் சுகுணாபுரம் பகுதியில் என்னுடைய தந்தைதான் கட்சியை ஆரம்பித்துள்ளார். எம்.ஜி.ஆர் அமெரிக்கா போய்விட்டு வந்த சமயத்தில் அவர்கூட நின்று போட்டோ எடுத்திருக்கிறேன். அந்த போட்டோ என்னிடம் இருக்கிறது. அப்போதெல்லாம் தினகரன் எங்கிருந்தார் என்று தெரியவில்லை. திடீரென வந்து நான்தான் அம்மாவின் வாரிசு என்கிறார். அப்படியெல்லாம் ஏமாற்றிவிட முடியாது. ஒன்றரை கோடி தொண்டர்களும் அம்மாவின் வாரிசுதான். நானும் கடவுள் பக்தி உள்ளவன்; அவரும் கடவுள் பக்தி உள்ளவர். என்மீது சொன்ன விமர்சனத்தை ஏதாவதொரு கோயிலில் வந்து சொல்லச் சொல்லுங்கள்" என்றார் ஆவேசமாக.