`மாணவர்கள் நிலைமை எங்களுக்கும் தெரியும்' - அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுவாழ் தமிழர்கள்! | Overseas Tamils who help the government schools

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (15/07/2018)

கடைசி தொடர்பு:11:52 (16/07/2018)

`மாணவர்கள் நிலைமை எங்களுக்கும் தெரியும்' - அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுவாழ் தமிழர்கள்!

காமராஜர் பிறந்த நாளையொட்டி இன்று காலை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஐந்து அரசுப்பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களை தென்கொரியா, கனடா,மற்றும் அமெரிக்காவை சேர்ந்த தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் ஒன்றிணைந்து அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

அரசுப்பள்ளி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே  கோட்டுர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று இன்று தென்கொரியாவில் ஆராய்ச்சி மாணவராக பயிலும் மாணவர்தான் அருண்குமார். இவர் தான் பயின்ற அரசு பள்ளிக்கும் அதனை சுற்றியுள்ள ஐந்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் தேவையான உபகணங்களை வழங்க ஏற்பாடுகளை செய்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் துணைவேந்தரும், கணிதவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் செங்கதிர் மற்றும் வேதியியல் துறை பேராசிரியர் முனைவர்.ராஜேந்திரன் ஆகியோர் மாணவர்களுக்கும் பள்ளிக்கும் தேவையான உபகரணங்களை வழங்கினர்.

இதுபற்றி அருண்குமாரிடம் கேட்டபோது, ``நான் படிக்கும்போது அடிப்படை வசதியெல்லாம் இருக்காது. ஆனா நாங்க அரசு பள்ளியில படிச்சுதான் இப்ப நல்ல நிலைமைக்கு வந்துருக்கோம். ஆனா இப்ப உள்ள காலகட்டத்துல அரசு பள்ளிக்கு மாணவர்களோட வருகையும் ரொம்பவே குறைவு.

ஓரளவிற்கு வசதியா உள்ளவங்க தங்களுடைய புள்ளைங்கல தனியார் பள்ளிக்கு அனுப்பிடுறாங்க. ஆனா ஏழை மாணவர்கள் அரசு பள்ளிக்குதான் போய் ஆகவேண்டும் என்ற நிலைமை. நான் அரசு பள்ளியில்தான் படிச்சதுனால அங்க உள்ள மாணவர்களோட நிலைமை எனக்கு நல்லாவே தெரியும்.

எனவேதான் நாம ஏன் அரசு பள்ளிகளுக்கு உதவகூடாது என எண்ணிணேன். இங்க தென்கொரியால உள்ள கொரியா தமிழ் நண்பர்கள் என்ற அமைப்பினர் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவ முன்வந்தாங்க. அதுமட்டுமில்லாமல் என்னோட முன்னாள் பேராசிரியர் சூசன் டெபோராவும் அவங்களுக்கு தெரிஞ்ச அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மற்றும் தமிழர்களிடம் பேசி சில உபகரணங்களை வாங்கி கொடுத்தார். கனடாவை சேர்ந்த நண்பர்கள் சிலர் உதவுனாங்க. இதுபோன்ற சில அமைப்புகள், நண்பர்கள் என எல்லாரும் உதவியதால் தான் இன்று என்னால் அரசு பள்ளிகளுக்கு உதவ முடிந்தது. அரசு பள்ளிகள் தரம் உயரணும்; அரசு பள்ளி மாணவனும் உயரணும். இதுதான் என்னுடைய ஆசை. முக்கியமாக நான் இதற்கு ஒரு கருவி மட்டுமே. இதற்கு தன்னார்வமாக கொடையளித்தளவர்களே போற்றப்பட வேண்டியவர்கள் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன்" என முடித்தார்.