``தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரகால நிலை'' - நல்லகண்ணு அச்சம்!

நல்லகண்ணு

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரகால நிலை போல இருக்கிறது என கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு அச்சம் தெரிவித்துள்ளார்.

சேலம் டூ சென்னை 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட பாரப்பட்டி, கூமாங்காடு, இராமலிங்கபுரம் போன்ற பல பகுதிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நல்லகண்ணு, ''இந்த சேலம் டூ சென்னை 8 வழிச் சாலையை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்து போராடும். இந்த சாலை வளைர்ச்சி திட்டம் கிடையாது. ஏற்கனவே சேலம் டூ சென்னைக்கு 3 பாதைகள் இருக்கிறது. சேலம் டூ உளுந்தூர்பேட்டை சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு 10 ஆண்டுகளாக பணம் கொடுக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் 10 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.

இந்த திட்டத்திற்கு நிலம் கொடுப்பவர்களுக்கு பணம் தருவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. எதற்காக நில அளவீடு செய்கிறார்கள் என்பதும் சொல்லவில்லை. நில அபகரிப்பு சட்டத்தை மீறி நிலம் எடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை அரசியல்வாதிகள் மீறுகிறார்கள். மக்களை தூண்டுகிறார்கள் என்கிறார்கள். யாரும் மக்களை தூண்டவில்லை. இங்கு இருப்பவர்கள் பிழைக்க வந்தவர்கள் இல்லை. கால காலமாக தங்கள் மூதாதையர்கள் விட்டுச் சென்ற நிலங்களை காப்பாற்றிக் கொள்ள போராடுகிறார்கள். தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர கால நிலை இருப்பதை போல இருக்கிறது. எதற்காக இந்த நிலம் எடுக்கப்பட்டு வருகிறது. என்று கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் முழுமையாக தெரிந்து விடும். மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடித் தான் உரிமைகளை நிலைநாட்டமுடியும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!