`அ.தி.மு.க-வை பலவீனப்படுத்த பி.ஜே.பி நினைக்கிறது' - திருமாவளவன் குற்றச்சாட்டு! | Thirumavalavan speaks about bjp and admk

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (15/07/2018)

கடைசி தொடர்பு:22:20 (15/07/2018)

`அ.தி.மு.க-வை பலவீனப்படுத்த பி.ஜே.பி நினைக்கிறது' - திருமாவளவன் குற்றச்சாட்டு!

அ.தி.மு.கவை பலவீனப்படுத்த பி.ஜே.பி நினைக்கிறது என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அவரது தந்தை தொல்காப்பியன்  நினைவு நாளையொட்டி அவரது சொந்த ஊரான திட்டகுடியை அடுத்த அங்கனூருக்கு காரில் சென்றவர், திருச்சியில்  காமராஜர் பிறந்தநாளை  முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு, அக்கட்சி நிர்வாகிகளான கே.என்.அருள், பிரபாகரன், தமிழாதன் ஆகியோர் சகிதமாக மாலை அணிவித்தார்.

அடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய திருமாவளவன், “கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாற்றி, மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும். ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நசுக்கும் நீட் தேர்வை இந்தியா முழுவதும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். காவல்துறையில் போதிய ஜனநாயக உரிமை இல்லை. பணி நேரத்தை வரையறை செய்யாததால், போலீஸார் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.  அதனால் போலீஸாருக்கு 8 மணி நேரப் பணியை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு வார விடுமுறை வழங்கிட அனுமதிக்க வேண்டும்.

ஊழல் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கையை வெளியிட வேண்டும். “ஊழலை ஒழிப்போம்” எனக்கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு,  ஊழலை ஒழிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. திருத்தம் மட்டுமே செய்துள்ளார்கள் .

திருச்சி காந்தி மார்க்கெட் வெங்காயமண்டி தொழிலாளர்கள் 260 பேரின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க.வினர் அ.தி.மு.க.வை பலவீனப் படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்படுத்தி வருகின்றனர்'' என்றார்.