வெளியிடப்பட்ட நேரம்: 23:20 (15/07/2018)

கடைசி தொடர்பு:11:48 (16/07/2018)

வனத்திற்குள் கருங்காலி மரத்தை வெட்டிய மூவர் கைது.!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கடமலைக்குண்டு அருகே உள்ள அரசரடி வனப்பகுதியில் கருங்காலி மரத்தை வெட்டிய மூவரை அதிரடியாக கைது செய்தது வனத்துறை.

கருங்காலி மரக்கட்டைகள்


கடந்த சில வாரங்களாகவே தேனி மாவட்ட வனப்பகுதியில் வனவிலங்கு வேட்டை அதிகரித்துள்ள சூழலில், வனக்கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறைவான ஊழியர்களை கொண்டிருக்கும் மாவட்ட வனத்துறைக்கு பெரிய பரப்பளவு கொண்ட வனப்பகுதி சிரமத்தை ஏற்படுத்தினாலும் தொடர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அரசரடி வனப்பகுதியில் ரோந்து சென்ற வருசநாடு வனச்சரகர் இக்பால் மற்றும் அவரது குழுவினர், சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த மூவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அவர்கள்  கருங்காலி மரம் வெட்டி கடத்த இருந்தது தெரியவந்தது. உடனே சம்மந்தப்பட்ட மூவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசிய போது, ’’மூவரும் அரசரடி கிராமத்தை சேர்ந்த சுரேஷ், வேலுச்சாமி, சப்பாணிமுத்து என தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து 20ஆயிரம் மதிப்புள்ள கருங்காலி மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இந்த மரக்கட்டைகள் கோவில் கும்பாபிஷேகத்திற்காக வெட்டியதாக மூவரும் தெரிவித்தனர். மூவர் மீதும் வழக்குபதிவு செய்திருக்கிறோம்’’ என்றார்.