வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/07/2018)

கடைசி தொடர்பு:08:45 (16/07/2018)

கர்நாடகாவிலிருந்து நீர் திறப்பு - கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்!

கர்நாடகாவில் பெய்துவரும் தொடர்மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில், காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வெள்ள அபாய எச்சரிக்கை காவிரி

கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், ஒகேனக்கல்லுக்கு 45 ஆயிரம் கன அடி அளவுக்கு வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், மற்றொரு அணையான கிருஷ்ணராஜ சாகர் அணையும் நிரம்பிவழியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், இந்த அணையிலிருந்தும் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர், ஒகேனக்கல்லுக்கு வந்து சேரும்போது காவிரி கரையோரப்பகுதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால், தருமபுரி மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், காவிரிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, ``பிலிகுண்டு முதல் மேட்டூர் அணை வரை காவிரி கரையோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் மேடான இடத்துக்குச் செல்லுமாறும், வெள்ளம் சூழ்ந்துள்ள தகவலைத் தெரிவிக்க உதவி தொலைப்பேசி எண் 1077 அழைக்குமாறும்” தெரிவித்துள்ளார். 

வெள்ள அபாய எச்சரிக்கை

தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒகேனக்கல் பகுதியில் தண்டோரா போட்டு, வெள்ள அபாய எச்சரிக்கைச் செய்தி விடுவிக்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தற்போது, மேட்டூர் அணையில் நீர்மட்டம் 85 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகா அணைகள் நிரம்பி, அதிக அளவில் நீர் திறந்து விடுவதால்,``வேளாண் பாசன வசதிக்காக விரைவில் மேட்டூர் அணை திறந்துவிடப்படும்” என்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்