வெளியிடப்பட்ட நேரம்: 08:23 (16/07/2018)

கடைசி தொடர்பு:11:30 (16/07/2018)

மூதாட்டியின் உயிரைப் பறித்த சுங்கச்சாவடி பலகை - பொதுமக்கள் சாலைமறியல்!

சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த பலகை ஒன்று காற்றில் பறந்துவந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

மூதாட்டி பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பலம்பட்டி திருச்சி - திண்டுக்கல் சாலையில் சுங்கச்சாவடி  உள்ளது. அந்தப் பகுதியில் வழக்கமாக ஆடுகள் மேய்த்துவருபவர், பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்மாள். இவருக்கு வயது 60. 

இவர்,  நேற்று காலை பொன்னம்பலப்பட்டி பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார். 

 காட்டுப் பகுதியில் மேய விட்டுவிட்டு, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  சுங்கச்சாவடி அருகே உட்கார்ந்திருந்தார். அப்போது, காற்று பலமாக வீசியது. அந்தக் காற்றில் சுங்கச்சாவடிக்கு வரும் வாகனம் எந்த லைனில் செல்ல வேண்டும் என்பதைக் குறிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பலகை உடைந்து, காற்றில் பறந்து சென்று பொன்னம்மாள் மீது விழுந்தது. இதில், பொன்னம்மாள் படுகாயமடைந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், பொன்னம்மாளை  மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முயன்றனர். அப்போது, சுங்கச்சாவடியில் முதலுதவிக்காக இருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பொன்னம்மாள் பாட்டி ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறி ஆம்புலன்சில் ஏற்ற மறுத்துவிட்டனர். 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தத் தகவல் கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்குத் தெரிந்ததும், அவர்களும் வந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து  ஸ்தம்பித்தது. தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர்கள் வாசுகி, கென்னடி மற்றும் வையம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், ‘பொன்னம்மாள் மரணத்துக்குக் காரணமான அறிவிப்புப் பலகை ஒரு முறை இதேபோல உடைந்து விழுந்தபோது, அதைச் சரிசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். ஆனால், உடைந்த அறிவிப்புப் பலகையை அப்படியே அதே இடத்தில் வைத்துக் கட்டியதால்தான், இப்போது மூதாட்டி பொன்னம்மாள் உயிரைப் பறித்துள்ளது. எனவே, இந்த உயிரிழப்புக்கு சுங்கச்சாவடியினர்தான் காரணம். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இறந்த மூதாட்டியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை  வைத்தார்கள். 

இந்நிலையில், அந்த வழியாக வந்த எம்.எல்.ஏ-வும் நடிகருமான கருணாஸ், நடந்த  சம்பவம்குறித்து விசாரித்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு காவல்துறையினரிடமும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். ஆனாலும் மக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில், பொன்னம்மாளின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், பொன்னம்மாள் மரணம்குறித்து வழக்குப்பதிவு செய்த வையம்பட்டி போலீஸார், விசாரணை நடத்திவருகின்றனர்.

சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த பலகை காற்றில் பறந்து மூதாட்டி பொன்னம்மாளின் உயிரைப் பறித்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க