வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (16/07/2018)

கடைசி தொடர்பு:11:26 (16/07/2018)

தேனியில் கொட்டித்தீர்க்கும் கனமழை! - பள்ளிகளுக்கு விடுமுறை

தேனி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாகப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மழை

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் நேற்று முதல் மழை பெய்துவருகிறது. இதனால், இன்று காலை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் பள்ளிக்குப் புறப்பட்ட பின்னர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், சில இடங்களில் பள்ளி வாகனங்களில் வந்த பள்ளி நிர்வாகத்தினர், விடுமுறைச் செய்தியைக் கூறிவிட்டுச்சென்றனர். இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.

இது ஒருபுறம் என்றால், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடைவிதித்துள்ளது வனத்துறை. மேலும், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கும் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு, மஞ்சலாறு, வைகை போன்ற அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் மழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.