வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (16/07/2018)

கடைசி தொடர்பு:11:30 (16/07/2018)

சிட்டுக்குருவியின் குஞ்சுகளுக்காக ஆசிரியை செய்த தியாகம்!

சிற்றுயிர்கள்மீது பரிவு காட்டும்போது, உலகம் நம்மை உற்றுநோக்க ஆரம்பித்துவிடுகிறது. அப்படித்தான், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஆசிரியை சவீதா இப்போது பிரபலமாகியுள்ளார். அரியப்பம்பாளையத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி சவீதா, அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். சில நாள்களுக்கு முன், தன் ஸ்கூட்டியை வீட்டில் நிறுத்திவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இரு நாள்கள் கழித்து வீடு திரும்பியபோது, ஸ்கூட்டியின் முன்பக்கத்தில் பொருள்கள் வைக்கும் சிறிய பெட்டியில் சிட்டுக்குருவி கூடு கட்டியிருந்தது. சவீதாவுக்கு சிட்டுக்குருவியின் கூட்டை கலைக்க மனம் வரவில்லை. 

சிட்டுக்குருவி

கணவர் மற்றும் மகனை அழைத்து, 'ஸ்கூட்டியை யாரும் எடுத்துவிட வேண்டாம். அப்படியே அசையாமல் இருக்கட்டும்' என்று கூறிவிட்டார். மேலும், இரண்டு நாள் கழித்துப் பார்த்தபோது, சிட்டுக்குருவி கூட்டில்  மூன்று முட்டைகள் இருந்துள்ளன. முட்டைகளைப்  பார்த்ததும் சவீதா மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். சிட்டுக்குருவி இரை தேடச் சென்றிருந்தது. அதோடு, முட்டைகளை சிட்டுக்குருவி அடைக்காத்து வந்தது. தற்போது,  மூன்று குஞ்சுகள் பொரித்துள்ளன. குஞ்சுகளைப் பார்த்ததும் சவீதா மற்றும் குடும்பத்தினர் அளவற்ற மகிழ்ச்சி யடைந்தனர். அக்கம்பக்கத்தினரும் வந்து சிட்டுக்குருவிக் குஞ்சுகளைப் பார்த்துச் சென்றனர். 

தற்போதுவரை, ஆசிரியை சவீதா ஸ்கூட்டியை அப்படியே அசைக்காமல் வைத்துள்ளனர். குஞ்சுகள் பொரித்ததும் எங்கேயிருந்தோ தந்தைக்குருவியும் வந்து சேர்ந்துகொண்டது. தாய்க்குருவியும் தந்தைக்குருவியும் குஞ்சுகளுக்கு தினமும் இரையளித்துவருகின்றன. இது குறித்து ஆசிரியை சவீதா, ''எங்கள் வீட்டில் சிட்டுக்குருவி கூடுகட்டியதைக் கண்டதும் மனதுக்குள் மிகவும் சந்தோஷமாக இருந்தது. குஞ்சுகள் வளர்ந்து பறந்துசெல்ல  மூன்று மாதங்கள் ஆகும். அதுவரை ஸ்கூட்டியை நான் எடுக்க மாட்டேன்'' என்று கூறியுள்ளார். 

ஏராளமானோர், ஆசிரியை சவீதாவைப் பாராட்டிவருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க