கிறிஸ்டியைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை!- அதிரும் அடுத்தடுத்த ஐ.டி ரெய்டு | Income tax raids at companies owned by highways contractor

வெளியிடப்பட்ட நேரம்: 11:18 (16/07/2018)

கடைசி தொடர்பு:09:04 (17/07/2018)

கிறிஸ்டியைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை!- அதிரும் அடுத்தடுத்த ஐ.டி ரெய்டு

நெடுஞ்சாலைப் பணி ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

வருமானவரித்துறை சோதனை

தமிழக அரசுக்கு சத்துணவுப் பொருள்கள் விநியோகம்செய்யும் கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் கடந்த வாரம் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில், பலகோடி மதிப்பிலான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்தச் சோதனை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் குறிவைத்து  நடத்தப்பட்டது என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.

தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் துறையான நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்ததாரர்களாக உள்ள செய்யாதுரை மற்றும் நாகராஜன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றுவருகிறது.  வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில், சென்னையில் அவருக்குச் சொந்தமான அபிராமபுரம், சேத்துப்பட்டு, கஸ்தூரிரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை போன்ற இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட சோதனையில், 100 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், செய்யாதுரையின் சொந்த ஊரான விருதுநகரில், அவரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும்  அருப்புக்கோட்டையில் உள்ள நிறுவனங்கள் போன்ற பல இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.