ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தால் குற்றாலம் அருவிகளில் 2-வது நாளாக குளிக்கத் தடை!

குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குற்றாலம்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்துவருகிறது. அதனால், நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் முக்கிய அணைகளான பாபநாசம் 102 அடியை எட்டியது. அணைக்கு 5,488 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை 126 அடியை எட்டியிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியிருக்கிறது. 

அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால், அணைகளின் நீர்மட்டம் அதிகரித்தபடி உள்ளது. குண்டாறு, கருப்பாநதி அணை, கடனாநதி அணை ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகள் முழுக் கொள்ளளவை நெருங்கும் நிலையில் இருப்பதால், அணியின் பாதுகாப்புக் கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. கடனா அணையின் கரையோர மக்களுக்கு வருவாய்த் துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மலைப் பகுதிகளில் பெய்யும் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இரண்டாவது நாளாக இன்று தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் நீரின் வேகம் அதிகமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கவில்லை. 

பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. புலியருவியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படுவதால், அங்கு கூட்டம் அலைமோதுகிறது. குற்றாலத்தில் சாரல் மழையுடன் காற்று வேகமாக வீசுகிறது. இதமான சூழல் நிலவியபோதிலும் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!