`பிஞ்சு மலர்களைக் கருகவச்சிட்டியே இறைவா?' - கும்பகோணம் பள்ளி முன் கதறிய பெற்றோர்கள் | Kumbakonam fire tragedy memorial day

வெளியிடப்பட்ட நேரம்: 12:19 (16/07/2018)

கடைசி தொடர்பு:12:21 (16/07/2018)

`பிஞ்சு மலர்களைக் கருகவச்சிட்டியே இறைவா?' - கும்பகோணம் பள்ளி முன் கதறிய பெற்றோர்கள்

கும்பகோணம் பள்ளியில், கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட  தீ விபத்தில், தீயின் கோரப்பசிக்கு 94 குழந்தைகள் இரையாகின. அனைவரையும் உலுக்கிய இந்தச் சம்பவம் நடந்து இன்றோடு 14 ஆண்டுகள் ஆனாலும், எப்போதும் ஆறாத வடுவாகவே இருக்கிறது அந்த தீயின் கோரத்தாண்டவம்.14-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் பள்ளி முன்பாகக்  கூடி, அங்கே வைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலிசெலுத்திக் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்கவைத்தது.

அஞ்சலி செலுத்தும் பெற்றோர்

கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி, இப்படி விடியும் என யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். அன்றுதான் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள  ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் பள்ளியில் ஏற்பட்ட  தீவிபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். மேலும், 18 குழந்தைகள் காயமடைந்தனர். இதுபோன்ற சம்பவம் இனி எங்கும் எப்போதும் நடந்துவிடக் கூடாது என இதில் பாதிக்கப்பட்டவர்கள் கூறிவருகின்றனர். தீக்குச்சி சுட்டாலே தாங்காத குழந்தைகளைத் தீக்குப் பறிகொடுத்துவிட்டு இன்றும் வேதனையோடு இருக்கிறார்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள். சம்பவம் நடந்த அந்த நாளில், ஒவ்வொரு வருடமும் அனைவரும் பள்ளி முன் திரண்டு, மலர் தூவி,மெழுகுவத்தி ஏற்றி தங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலிசெலுத்துவார்கள்.

அதன்படி இன்றும் 14-ம் ஆண்டு குழந்தைகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. பள்ளியின் முன்பாக 94 குழந்தைகளின் படங்களை அலங்கரித்துவைத்து,  பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மலர் தூவியும், மெழுகுவத்தி ஏற்றி மலர் வளையம் வைத்தும் அஞ்சலிசெலுத்தினர். அப்போது பள்ளியின் அருகிலேயே குடியிருக்கும் பெண்மணி ஒருவர், ''அப்போது கேட்ட குழந்தைகளின் அலறல் சத்தம் இன்னும் எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது. அந்தப் பிஞ்சு மலர்களை இப்படி கருகவச்சிட்டியே இறைவா'' எனக் கண்ணீர்விட்டார்.

அஞ்சலி செலுத்தும் பெற்றோர்கள்

தன் இரண்டு குழந்தைகளையும் இழந்த இன்பராஜிடம் பேசினோம், `'எங்களுக்கு நீங்கதானடா உலகமே என வாழ்ந்தேன். இப்போது வயதாகி யாரோட பற்றுதலும் இல்லாமல் இருக்கிறேன். நீங்க இருந்திருந்தா அந்தக் குறை வந்திருக்காது. இந்த நினைவு நாளை நாங்கள் ஏன் கடைபிடிக்கிறோம் என்றால் எங்கள் பிள்ளைகளுக்கு ஏற்பட்டது வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும், பெரும் விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்காகவும்தான். படிக்கப்போன இடத்துல இப்படி எங்க குழந்தைங்க பலியானது பெரும் துயரம். இந்த நினைவு தினத்தின்போது, ஒவ்வொரு வருடமும் இந்த நாளை குழந்தைகள் தினமாக அரசு அறிவித்துக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இந்த நாளில் உள்ளூர் விடுமுறைவிட வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகிறோம். இதன்மூலம் குழந்தைகள் பற்றிய விழிப்புஉணர்வு எப்பவும் இருக்கும். மேலும், பள்ளிகளும் எந்த விஷயத்திலும் மெத்தனமாக இல்லாமல் இருப்பார்கள் என்பதாலேயே இந்தக் கோரிக்கையை வைக்கிறோம். இந்த ஆண்டாவது செயல்படுத்துவார்கள் என எங்கள் குழந்தைகளின் நினைவோடு நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்'' எனக் கைகளை ஏந்திக் கதறினார்.

அங்கு கூடிய ஒவ்வொருவரும் பிள்ளைகளை நினைத்துக் கதறியது அனைவரையும் கண்கலங்கவைத்தது. பின்னர் 94 குழந்தைகளின் நினைவாக பாலக்கரையில் கட்டப்பட்டுள்ள  நினைவிடத்துக்கு ஊர்வலமாகச் சென்று மௌன அஞ்சலி செலுத்தினர். மாலை 6 மணிக்கு, மௌன ஊர்வலமாக மகாமகம் குளத்துக்குச் சென்று, தீவிபத்தில் இறந்த குழந்தைகள் 94 பேரின் நினைவாக மோட்ச தீபம் ஏற்ற உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க