சவால்விட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களுக்கு 'செக்' வைத்த புதுச்சேரி சபாநாயகர்! | Puducherry Speaker's checkmate to BJP MLAs

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (16/07/2018)

கடைசி தொடர்பு:12:50 (16/07/2018)

சவால்விட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களுக்கு 'செக்' வைத்த புதுச்சேரி சபாநாயகர்!

சவால்விட்ட பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு பேரவைக்குள் நுழைய அனுமதி மறுத்து 'செக்' வைத்திருக்கிறார், புதுச்சேரி சபாநாயகர்!

சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்எல்ஏக்கள்

புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் பரிந்துரையின்றி பா.ஜ.க-வைச் சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய மூன்று பேரை எம்.எல்.ஏ-க்களாக நியமித்தது மத்திய பா.ஜ.க அரசு. அதே வேகத்தில், அவர்கள் மூவருக்கும் ஆளுநர் மாளிகையில் ரகசியமாக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் கிரண்பேடி. இந்த நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் எம்.எல்.ஏ-க்களின் நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடும் சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்எல்ஏக்கள்

இதையடுத்து, மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்தனர். ஆனால், சட்டப்பேரவைக்குள் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார் சபாநாயகர் வைத்திலிங்கம். இதைடுத்து, ஆளும் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றதில் மேல் முறையீடுசெய்யப்பட்டது. நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு அந்த வழக்கில், வரும் 19-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர் நீதிபதிகள். அதைத் தொடர்ந்து, “மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு உச்ச நீதிமன்றம் எந்தத் தடையையும் விதிக்கவில்லை. புதுச்சேரி சட்டமன்றத்துக்குள் செல்வதற்கு மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களுக்கும் சுதந்திரம் உள்ளது. அதையும் மீறி தடை செய்தால், அவர்கள் நீதிமன்றத்தை நாடி அவமதிப்பு வழக்கைத் தொடரலாம்” என்று கிரண்பேடி கூறினார். இதையடுத்து, “நாங்கள் மூன்று பேரும் சட்டப்பேரவையில் பங்கேற்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால், நாங்கள் திங்கள்கிழமை (இன்று) சட்டப்பேரவைக்குள் வருவோம். சபாநாயகர் எங்களைத் தடுத்தால், அது நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் என்பதால் அவர்கள் எங்களை அனுமதிப்பார்கள்” என்று நியமன எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்திருந்தனர்.

பாஜக எம்.எல்.ஏக்கள்

நியமன எம்.எல்.ஏ-க்களின் இந்த அறிவிப்பால், புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இன்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நேரத்தில், பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேரும் பேரவைக்குள் நுழைய முயற்சிசெய்தனர். ஆனால், சட்டப்பேரவையில் பிரதான கதவுகளை மூடிய காவலர்கள், நியமன எம்.எல்.ஏ-க்களை உள்ளே விடாமல் தடுத்துநிறுத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், அசாதாரணமான சூழல் நிலவியது. போராட்டம் முழுவதையும் செல்போனில் பதிவுசெய்த பா.ஜ.க-வினர், சிறிது நேரத்தில் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுச் சென்றனர். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த நியமன எம்.எல்.ஏ-க்கள், “நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சபாநாயகரிடம் மனு அளித்தும் அவர் மௌனமாக இருக்கிறார். புதுச்சேரியின் நிர்வாகியான ஆளுநர் உத்தரவையும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் அவர் மீறி வருகிறார். அவரைப் பொறுத்தவரை இந்த ஆட்சி இருக்கக் கூடாது என நினைக்கிறார். சபாநாயகர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்” என்றனர்.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க