மூன்றாவது அணி முயற்சியில் சரத்குமார்?

சரத்குமார்

தமிழக அரசியலில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் நடிகர் சரத்குமார் இறங்கியிருப்பதாகக் கூறுகின்றனர், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள். 'மக்கள் நலக் கூட்டணி அமைந்ததுபோல, அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு மாற்றாக மூன்றாவது அணி ஒன்றையும் அமைக்க இருக்கிறார்' என்கின்றனர் ச.ம.க வட்டாரத்தில். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை கடந்த வாரம் சந்தித்துப் பேசினார் சரத்குமார். இதன்பிறகு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்துள்ளார். அடுத்ததாக, சி.பி.ஐ, வி.சி.க ஆகிய கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவதற்குத் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து நம்மிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர், "மக்கள் நலக் கூட்டணியில் இடம்பிடித்த அரசியல் கட்சிகளைக்கொண்டு மீண்டும் புதிய அணியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். முதலில், மக்கள் தொடர்பான பிரச்னைகளுக்குக் குரல்கொடுக்க இருக்கிறோம். எங்களுடைய போராட்டங்களில் பங்கேற்பதாக வாசனும் பாலகிருஷ்ணனும் உறுதியளித்துள்ளனர்.

நடிகர் சங்க விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது ரஜினிக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவர் அமைதியாக இருப்பது சரத்குமாருக்கு கடும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசியல்ரீதியாக ரஜினியை எதிர்க்கும் மனநிலையில்தான் சரத்குமார் இருக்கிறார். அதேபோல, கமலுக்கு எதிரான அரசியலைத்தான் நாங்கள் முன்னெடுப்போம். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்துடன் நட்பில் இருக்கிறோம். எங்களுடைய முயற்சியை அவர் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!